மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களை சூனியமாக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு இடம்பெற்றுள்ளது

375

 

2016 ஆம் நிதியாண்டுக்கான தேசிய அரசின் வரவு – செலவுத் திட்டத்துக்கு மாகாண முதலமைச்சர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களை சூனியமாக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு இடம்பெற்றுள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வரவு – செலவுத் திட்டத்தில் மாகாணசபைகளுடன் தொடர்புடைய விடயதானங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மாகாண முதலமைச்சர்கள் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கண்டியில் விசேட கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

cv-vigneswaran-took-oath-before-president-mahinda-rajapaksa-4

இதன்போதே பட்ஜெட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவில்லை. வடக்கு மாகாணசபையில் வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாலேயே அவர் கலந்துகொள்ளவில்லை என்று மத்திய மாகாண சபை முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார். அத்துடன், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரைச் சந்தித்து இதுவிடயம் பற்றி மாகாண முதலமைச்சர்கள் பேச்சு நடத்தவுள்ளனர் என அறியமுடிகின்றது. மாகாண முதலமைச்சர்கள் வரவு – செலவுத் திட்டத்தை ஏன் எதிர்க்கின்றனர் என்பதற்கான விளக்கத்தை வட மத்திய மாகாண சபை முதலமைச்சர் பேசல ஜயரட்ன வழங்கினார். “மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின்கீழ் மாகாணசபைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பவுள்ளது. இந்த நடவடிக்கையைக் கண்டிப்பதுடன், இது அரசியல் அமைப்புக்குப் புறம்பானதாகும். எவ்வித ஆய்வும் செய்யாமல் வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாத இறுதியிலும் அமைச்சின் செயலாளரிடம் சென்று மாகாண முதலமைச்சர்கள் பணம் கேட்டு கெஞ்சவேண்டிய நிலைமை ஏற்படும். வரவு – செலவுத் திட்ட யோசனையின் அடிப்படையில் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் ஒரு கிளைக் காரியாலயமாக மாகாண சபைகள் மாற்றப்பட்டுள்ளன. நிதி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தின் சில விடயங்களில் திருத்தம் செய்யப்பட்டது போன்று மாகாணசபைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவகாரத்திலும் திருத்தம் செய்யப்பட நேரிடும்” – என்று கூறினார். அதேவேளை, மாகாணசபைகளின் அதிகாரங்களைக் குறைக்கும் எண்ணம் அரசுக்குக் கிடையாது என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். மாகாண சபைகளுக்கான நிதி ஒதுக்கங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சின் கீழ் எதிர்காலத்திலும் சீரான முறையில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். அத்துடன், வடமத்திய மாகாண முதலமைச்சரின் குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்தார். வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறியுள்ளது. தற்போது குழுநிலை விவாதம் இடம்பெற்று வருகின்றது. இதன்போது திருத்தங்களை முன்வைக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. –

SHARE