ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போகச் செய்யப்பட்ட விவகாரத்தில் சில அரச நிறுவனங்கள்,

343

 

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போகச் செய்யப்பட்ட விவகாரத்தில் சில அரச நிறுவனங்கள், குறிப்பாக இலங்கை இராணுவம் செயற்படும் விதம் குறித்து தனக்கு திருப்தியானதாக இல்லை என்று எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட குற்றம் சாட்டியிருக்கிறார். இலங்கை இராணுவமும் இராணுவப் புலனாய்வு பிரிவும் மந்தகதியில் செயற்படுகின்றமை தனக்குப் பெரும் பிரச்சினையாக இருப்பதாக அவர் தெரிவித்தார் ஊடகவியலாளர் பிரகீத் எக்னிலிகொட காணாமல் போகச்செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவில் வைக்கப்பட்டிருந்த இராணுவப் புலனாய்வு பிரிவின் முன்னாள் அதிகாரிகள் இரண்டு பேர் இன்று ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். எக்னெலிகொட காணாமல் போகச்செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின்போது, இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இவர்களது கைதுக்கு சில அமைப்புக்களினால் ஏற்கனவே எதிர்ப்பு இருந்துவந்த நிலையில், இன்றைய தினம் அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படலாம் என்ற அச்சத்தினால், ஹோமாகம நீதிமன்ற வளாகம் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அங்கு மேலதிக காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் இவர்களது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற வளாகத்திற்கு சில கிலோ மீட்டர்களுக்கு அப்பால் நகரின் மத்தியில் நாட்டுக்காக இராணுவத்தினர், சிவ்பல சேனா என்கிற அமைப்புகள் உட்பட பல சிவில் குழுக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் “இராணுவத்தினர் மீது கை வைக்காதே”, “இராணுவத்தினரை காட்டிக்கொடுக்காதே” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷமெழுப்பினர். இந்த பின்னணியில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இந்த இரு முன்னாள் இராணுவ அதிகாரிகளும் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டனர். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி டிசெம்பர் 17ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்தார். –

SHARE