கடந்த பொதுத்தேர்தலுக்கு பின்னர் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம் அவர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அரியநேத்திரன், செல்வராசா, ஆகியோர் தமிழ் தேசிய மன்றம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் குத்துவெட்டுகளும் மோதல்களும் அதிகரித்து வரும் நிலையில் மட்டக்களப்பில் தமிழரசுக்கட்;சிக்குள்ளேயே பிளவு ஏற்பட்டுள்ளது.
கடந்த பொதுத்தேர்தலில் தாங்கள் தோல்வியடைவதற்கு தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைராசசிங்கத்தான் காரணம் என செல்வராசா, அரியநேத்திரன், ஆகியோர் பத்திரிகையாளர் மகாநாட்டை கூட்டி குற்றம் சாட்டினர். அந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் யோகேஸ்வரனும் கலந்து கொண்டு துரைராசசிங்கம் மீது குற்றம் சாட்டினர்.
இதனை தொடர்ந்து ஏற்பட்ட மோதல்களும் பிளவுகளும் தனிக்கட்சி தொடங்கும் அளவிற்கு முற்றியுள்ளது.
இந்த கூட்டில் ரெலோவை சேர்ந்த பிரசன்னா சேர்க்கப்பட்ட போதிலும் ஏனைய மாகாணசபை உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேர்க்கப்படவில்லை.
மாவீரர் தினம் போன்ற நிகழ்வுகளை அனுஸ்டிக்கும் வகையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கலாம் என சொல்லப்பட்டாலும் தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவின் வெளிப்பாடுதான் இது என மட்டக்களப்பு மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழரசுக்கட்சி செயலாளர் துரைராசசிங்கம் அவர்கள் மீது தமது காழ்புணர்ச்சியை வெளிப்படுத்துவதற்கு ஒரு களமாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை பயன்படுத்தி கொண்டுள்ளனர் என மட்டக்களப்பு அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.
கிழக்கு மாகாண அமைச்சர் துரைராசசிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன், வியாழேஸ்வரன் ஆகியோரை துரோகிகளாக சித்தரிக்கும் வகையில் மட்டக்களப்பு செய்திகளை வெளியிடும் இணையத்தளங்கள் சில செய்திகளை வெளியிட்டுள்ளன.
இந்த செய்திகளை வெளியிடுவதில் யார் பின்னணியில் இருந்தார்கள் என்பதை மக்கள் அறிவார்கள் என்றும் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.