காத்திருப்புக்கு எல்லையில்லை. வலி நிறைந்த வாழ்க்கையிலிருந்து மீள்வதற்காக, எங்காவதிருந்து ஒரு கை நீண்டு அந்த மீட்பைச் செய்யுமா என்று எதிர்பார்த்திருக்கும் காத்திருப்பு மிகக் கொடியது. ஆனால், அப்படித்தான் இன்றைய வாழ்க்கை வன்னியில் பெரும்பாலானவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.
இதை அவர்கள் விரும்பவேயில்லை. ஆனால் தள்ளி விடமுடியாத அளவுக்கு இது அவர்களுடைய கால்களைச் சுற்றிக் கொடியாகவும் விசப்பாம்பாகவும் பின்னியிருக்கிறது. இந்த அவலத்திலிருந்து, இந்தக் காத்திருப்பிலிருந்து மீள்வதெப்படி?
போர் முடிந்தாலும் அவலம் முடியவில்லை என்பதற்குச் சாட்சியங்களாக வன்னியிலும் கிழக்கு மாகாணத்திலும் ஏராளம் மனிதர்கள் உள்ளனர். அவர்களுடைய வாழ்க்கை இருக்கிறது.
இப்படி ஆயிரக்கணக்காக உள்ள சாட்சிகளில் ஒருவர், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள முழங்காவில் அன்புபுரத்தில் வசிக்கும் செபஸ்ரியாம்பிள்ளை சதீஸ்குமார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தினத்தையொட்டிப் பல நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் இந்த டிசம்பர் மாதத்தில் இதுமாதிரியிருக்கும் பல்லாயிரக் கணக்கானவர்களின் குரலுக்கு ஒரு அடையாளமாக பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள நேர்காணல்:-
கேள்வி : உங்களுடைய பாதிப்பு எப்படி ஏற்பட்டது? என்ன நடந்தது?
பதில் : – வன்னி இறுதிப்போரின்போது நாங்கள் முழங்காவிலில் இருந்து இடம்பெயர்ந்து போய்க்கொண்டேயிருந்தோம். 2009 மார்ச் மாதத்தில் முல்லைத்தீவு மாட்வடத்திலுள்ள வலைஞர் மடம் என்ற இடத்துக்குப் போய்ச்சேர்ந்தோம்.
முள்ளிவாய்க்காலுக்குப் பக்கத்தில் இருக்கிறது வலைஞர் மடம். அங்கே இருக்கும் போதுதான் காயப்பட்டேன். எறிகணையினால்தான் இந்தத் தாக்கம் ஏற்பட்டது. அதிலேயே ஒரு கால் துண்டிக்கப்பட்டு விட்டது.
மற்றக்காலிலும் கடுமையான சேதம். அதோடு, முள்ளந்தண்டிலும் காயமேற்பட்டது. முள்ளந்தண்டுக் காயத்தினால் எழுந்த நடமாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கு.
காயப்பட்டவர்களை எல்லாம் உடனடியாகவே கப்பலில் ஏற்றிக் கொண்டு திருகோணமலைக்குப் போனார்கள். என்னையும் அப்படித்தான் கொண்டு போனார்கள். பிறகு அங்கே சிகிச்சை நடந்தது. அதற்குப் பிறகு முகாமுக்குப் போய், குடும்பத்துடன் சேர்ந்தேன். மீள்குடியேற்றம் நடந்தபோது ஊருக்குத் திரும்பி வந்தோம்.
கேள்வி : இந்தப் பாதிப்புக்குப் பிறகு நீங்கள் என்ன மாதிரி உங்களுடைய வாழ்க்கையைக் கொண்டு நடத்துகிறீர்கள்?
பதில் : அதை எப்படிச் சொல்கிறது? பெரிய கஸ்ரம். ஒரு நாள் பொழுதைப் போக்கிறதே பெரிய போராட்டமாக இருக்கு. உழைக்கக்கூடிய நிலையில் இருக்கிற பல குடும்பங்களே போதிய வருமானமில்லாமல் இருக்கும் போது என்னைப் போல எழுந்து நடக்கவே முடியாமல் இருக்கிறவர்களுடைய நிலைமையைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?
சாப்பாட்டுச் செலவுக்குப் பணம் வேணும். மருத்துவச் செலவுக்குத் தனியாக் காசு தேவை. குளிசை வாங்க வேணும். சத்துள்ள சாப்பாடு சாப்பிட வேணும். ஒவ்வொரு மாதமும் தவறாமல் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் 27 ஆம் வார்ட்டுக்குப் போய் கிளினிக் காட்ட வேணும்.
முழங்காவிலில் இருந்து யாழ்ப்பாணம் போவதாக இருந்தால், பஸ்ஸில் போக முடியாது. என்னால் ஏறி இறங்க ஏலாது. அப்படி இன்னொரு ஆளின் உதவியோட போறதாக இருந்தாலும் அது பெரிய கஸ்ரம். வீல்செயாரையும் பஸ்ஸிலை ஏற்ற வேணும். வீட்டை இருந்து பஸ் நிலையத்துக்கு வாறது பிரச்சினை.
பிறகு, பஸ் நிலையத்திலிருந்து ஆஸ்பத்திரிக்குப் போறது இன்னொரு பிரச்சினை. இதைவிட முழங்காவிலுக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையில் 45 கிலோ மீற்றருக்கு மேல போகவேணும்.
அப்படியென்றால், கட்டாயமாக குறைந்தது ஒரு ஓட்டோ தேவை. அதுக்கு எப்பிடியும் 3500 ரூபாய் எடுப்பார்கள். நான் போய், கிளினிக் முடித்துக் கொண்டு வரும் வரையிலும் ஓட்டோ காத்திருக்க வேணும். அதையும் சேர்த்துத்தான் காசெடுப்பார்கள்.
இதைவிட பிற செலவுகள்? அதுக்கு என்ன செய்யிறது? பெரிய கஸ்ரம்தான். எனக்கு ஒரு மகன் இருக்கிறார். 10 வயது. இந்த ஆண்டுதான் ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றியவர். மனைவியும் நானும் பிள்ளையுமாக மூன்றுபேர் கொண்ட சிறிய குடும்பம். மனைவி வீட்டுப் பணிகளோடு இப்ப கொஞ்சமாக வீட்டுத் தோட்டமும் செய்கிறார்.
கேள்வி : இப்படியான நிலையில் உங்களுக்கு ஏதாவது உதவிகள் இதுவரையில் கிடைத்திருக்கா? அரசாங்கம் மாற்றுத்திறனாளிகளுக்கு அல்லது போரிலே பாதிக்கப்பட்டவர்களுக்கு என்று விசேட உதவிகள் எதுவும் செய்யவில்லையா? அதைப்போல மாகாணசபை அல்லது புலம்பெயர் அமைப்புகள் மற்றும் உள்ளுர் அமைப்புகள் என எவையாவது உதவியிருக்கின்றனவா?
பதில் : குறிப்பிடத்தக்க உதவிகள் எதுவும் கிடைத்ததில்லை. ஆனால் சிறிய சிறிய உதவிகள் கிடைத்துள்ளன. பல அமைப்புகள் தொடர்பு கொண்டு எங்கள் தேவைகளைக் கேட்டுக் கொள்கின்றன. ஆனால், அவை தருகின்ற உதவிகள் முழுமையான அளவில் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்வதில்லை.
என்னைப்போலப் பாதிக்கப்பட்ட நிலையிலிருந்த 30 பயனாளிகளுக்கு கடந்த காலங்களில் IOM என்ற அமைப்பு ஒவ்வொரு ஓட்டோக்களை வாங்கிக் கொடுத்தது. அதைப்பெற்றவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்கக்கூடிய ஒரு நிலையைப் பெற்றிருக்கிறார்கள். எங்களுக்கும் அப்படித் தரப்படும் என்று சொன்னார்கள். அதை நம்பி எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால், இதுவரையில் எதுவுமே கிடைக்கவில்லை.
மாற்றுத்திறனாளிகளுக்கு அப்படியான ஒரு உதவி கட்டாயம் தேவை. ஏனென்றால், அவர்கள் மருத்துவ சிகிச்சைக்குப் போவதற்கு வாகன வசதி கண்டிப்பாக வேணும்.
அதற்கு அவர்களால் செலவு செய்ய முடியாது. ஒரு ஓட்டோ நிற்குமாக இருந்தால் அவர்கள் அதைப்பயன்படுத்தித் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள். அதோடு அந்த ஓட்டோவை வைத்துக்கொண்டு அவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத் தேவைகளையும் ஓரளவுக்கு நிறைவு செய்ய முடியும்.
எனக்கு அண்மையில் மாகாண அமைச்சர் சத்தியலிங்கத்தின் மூலமாக 12500 ரூபாய் பண உதவி கிடைத்தது. என்னைப்போல இருக்கிற பலருக்கும் மாற்றுத்திறனாளிகள் நாளை ஒட்டி இந்த உதவியைச் செய்தார்கள். இனி மாதாமாதம் 1500 ரூபாய் தரப்படும் என்று சொன்னார்கள்.
இதைப்போலத்தான் கடந்த ஆண்டு எங்களுக்கு மகிந்த சிந்தனை மூலமாக மாதமொன்றுக்கு 3000 ரூபாய் வீதம் தந்தார்கள். ஆனால், இப்ப கடந்த ஐந்தாறு மாதங்களாக அந்த நிதியுதவி கிடைக்கவில்லை. இனி அது வருமோ இல்லையோ என்று யாருக்குமே தெரியாது.
உள்ளூர் அமைப்புகளும் சிறிய அளவிலான உதவிகளைச் செய்து வருகிறார்கள். முன்னர் ஒரு பத்திரிகை என்னைப் பேட்டி கண்டு அதை வெளியிட்டிருந்தது. அந்தப் பேட்டியைப் பார்த்தவர்களில் யாரோ ஒருத்தர் என்னைப் பார்க்க விரும்புகிறார் என்று சொன்னார்கள். சரியென்று நானும் சொன்னேன். ஒருநாள் அவர்கள் வந்தனர்.
வந்து, விவரங்களைக் கேட்டு விசாரித்தார்கள். நானும் உள்ள நிலைமைகளைச் சொன்னேன். எல்லாவற்றையும் கேட்டவர்கள், தாங்கள் உதவி செய்கிறோம். ஏதாவது தொழில் செய்ய முடியுமா என்று கேட்டனர். வீட்டோடு ஒரு சிறிய கடையை வைத்து நடத்தலாம் என்று சொன்னேன்.
சரி என்று என்னுடைய வங்கிக் கணக்கிலக்கத்தை வாங்கிக் கொண்டு சென்றார்கள். இரண்டு வாரம் செல்ல ஒரு நாள் நான் வங்கியில் பார்த்தபோது 3000 (மூவாயிரம்)ரூபாய் மட்டும் வைப்பிட்டிருந்தார்கள்.
இப்படி இவர்கள் வாகனத்தில் வந்து பார்த்து விவரம் கேட்டுக்கொண்டு போனதைப் பார்த்த ஊரவர்கள் நினைத்தார்கள், ஏதோ பெரிய உதவி சதீஸ்குமாருக்குக் கிடைத்திருக்கு என்று. இது பரவாயில்லை. இவர்கள் வந்து போன பிறகு புலனாய்வாளர்கள் வந்து விசாரித்தார்கள். வந்தவர்கள் யார்? அவர்களை உங்களுக்கு எப்படித் தெரியும்? எவ்வளவு உதவி செய்தார்கள்? என்று பல கேள்விகள்.
கேள்வி -: இப்பொழுது என்ன தொழில் செய்கிறீர்கள்? வருவாய் எப்படி? குடும்பத்தில் – உறவுகளில் யாராவது உதவுகிறார்களா?
பதில் : – என்னதான் இருந்தாலும் நாங்கள் எங்களுடைய கைகளால் உழைத்து வாழ்வதைப்போல வராது. சிறிய அளவில் உதவிகள் கிடைக்கும். அவர்களையும் தொடர்ந்து சிரமப்படுத்த முடியாதல்லவா! நான் யாருடைய உதவிகளையும் எதிர்பார்க்க விரும்பவில்லை.
ஆனால், என்னுடைய நிலைமை அப்படியாக இருப்பதால்தான் யாருடைய கைகளையும் நம்பி இருக்க வேண்டியுள்ளது. இது மனதுக்குப் பெரிய சங்கடமான விசயம்.
நானாகப் போய் இப்படிக் காயப்பட்டதோ கஸ்ரமான நிலைமையை விலை கொடுத்து வாங்கியதோ இல்லை. போரினால் இப்படி வந்ததற்கு நான் என்ன செய்ய முடியும்? ஆனால், காலத்தண்டனையாக இதை அனுபவிக்க வேண்டியிருக்கு. இந்த நிலைமையில் யாராவது உதவினால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.
இந்த நிலைமையில் இருந்து கொண்டு மலசலம் கழிப்பதற்குக் கடிமான இருக்கிறது என்று ஹற்றன் நாஷனல் வங்கியில் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கி ஒரு மலசல கூடத்தைச் சிறியதாக அமைத்தேன். கொமட் இருந்தால் கொஞ்சம் வசதியாக இருக்கும். கஸ்ரப்படத்தேவையில்லை என்று. ஆனால், அதற்குத் தண்ணீர் வசதி செய்ய முடியவில்லை.
அப்படிச் செய்வதாக இருந்தால் அதற்குத் தனியாகச் செலவு செய்ய வேணும். என்னிடம் வசதியில்லை. தண்ணீர் இல்லாமல் கொமட்டைப் பயன்படுத்த முடியாது. இதனால் செய்த வேலை பயனில்லாமல் போயிட்டுது.
பார்ப்பவர்கள் நினைப்பார்கள், இவர் கொமட் வசதியோட இருக்கிறார் என்று. ஆனால், உண்மையில் அதைப் பயன்படுத்த முடியாமல் அது சும்மா கிடக்குது. நான் எடுத்த கடனுக்கு வட்டி கட்டிக்கொண்டிருக்கிறேன்.
தண்ணீர் வசதி இருந்திருக்குமாக இருந்தால், அதிலேயே குளித்தும் விடலாம். வேலைகள் இலகுவாகும். பராமரிக்கிறவர்களுக்கும் கொஞ்சம் சிரமம் குறைவு. இப்பொழுது வாளியொன்றைப் பயன்படுத்தியே மலம் கழிக்கிறேன். பிறகு அதை எடுத்துச் சென்று மலக்குழியில் ஊற்றுவார்கள். இப்படித்தான் சிரமங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
கேள்வி : நீங்கள் நடத்துகின்ற கடையின் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?
பதில் : – பெரிய முதலீட்டைச் செய்து கடையை நடத்தும் வசதி எனக்கில்லை. அதை விட ஓடியாடி நடமாடி பொருட்களை வாங்கவோ, விற்கவோ, காரியங்களைப் பார்க்கவோ கூடிய நிலையிலும் நானில்லை. ஏதோ செய்யக்கூடியதைச் செய்வோம் என்ற அளவில் வீட்டுடன் சேர்த்து சின்னப் பெட்டிக்கடை ஒன்றை வைத்து நடத்துகிறேன்.
கடன்பட்டாவது ஒரு ஓட்டோவை லீஸிங்கில் எடுக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். கடனை எப்படி அடைப்பது என்றுதான் தெரியவில்லை. அதுதான் கேள்வியாக இருக்கிறது.
கேள்வி : உங்களைப் போன்றவர்களுக்கு என்னமாதிரியான உதவிகள் தேவை?
பதில் -: எங்களுக்கு மூன்று வகையான உதவிகள் தேவை.
1. சுயதொழிலுக்கான உதவி. இதைப் பெற்றுக்கொண்டால், நல்ல வழிகாட்டலோடு நாங்களாகவே வருமானத்தைப் பெற்று வாழலாம். அடிக்கடி யாரையும் தொல்லைப்படுத்தத் தேவையில்லை. நாங்களே எங்களுடைய சொந்தக் காலில் நிற்கிற மாதிரியும் இருக்கும்.
2. அப்படிச் சுயமாகத் தொழில் செய்ய முடியாதவர்களுக்கு நிரந்தர உதவிகள் தேவை. இதைத் தனிப்பட்ட ரீதியில் தொடர்ச்சியாகச் செய்ய முடியாது. அமைப்புகள் ஏதாவதுதான் செய்ய வேணும். ஆனால், இதையும் விட அரசாங்கம் இதுக்கு ஒரு முறையான திட்டம் வகுத்துச் செயற்பட வேணும்.
3. உளரீதியாக ஒவ்வொருவரையும் பாதுகாக்க வேணும். இதுதான் இப்ப முக்கியம் என நம்புகிறேன்.
கேள்வி -: இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீங்கள்?
பதில் : – எங்களுடைய மக்கள் நினைத்தால் எங்களைப் போன்றவர்களுக்கான உதவிகளைச் செய்வது சுலபம். அரசியல்வாதிகளை நம்பிப் பயனில்லை. அவர்கள் தங்களுடைய அரசியல் ஆதாயங்களுக்காக எதை எல்லாமோ சொல்வார்கள். ஒரு முறையான உதவிக்கு யார்தான் திட்டமிடுவார்கள்? யாருடைய மனம் இதற்காக இரங்கும்?
Thinakaran