இதயங்களை இணைப்பதற்கு முன் ஜனாதிபதி தமிழர்களின் மனங்களை வெல்ல வேண்டும் மக்கள் குறைகேள் சந்திப்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய காலாநிதி சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை முத்தயன்கட்டு பிரதேச மக்களின் பிரச்சனைகளை அறிந்து கொள்ளும் மக்கள் சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வடக்குக்கும், தெற்கிற்கும் இடையே மக்களின் இதயங்களை இணைக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
முதலில் ஜனாதிபதி தமிழர்களின் மனங்களை வெல்ல வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலில் நின்றபோது அனைத்து கைதிகளும் விடுவிக்கபட நடவடிக்கை எடுப்பதாகவும், இராணுவத்தின் கோர வாய்க்குள் அகப்பட்ட எமது மக்களின் பூர்வீக காணிகளை விடுவிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
அது போல் தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சனைகளுக்கு ஒரே தடவையில் தீர்வுகாண ஒரு அரசியல் தீர்வை நோக்கி பயணிப்பதாகவும் அதன் மூலம் தமிழர்களின் கௌரவமான வாழ்வு வடகிழக்கு பிரதேசத்தில் மலருமென எமது தலைவர்கள் மத்தியில் தெரிவித்திருந்தார்.
எழுதாத ஒப்பந்தங்கள் பல தமிழர்களுக்காக நிறைவேறின. போதாதற்கு சந்திரிக்கா அம்மையாரும் சாமாதான ஒளியாக தமிழர் முன் வந்தார். இன்று ஒளியும் இல்லை வாழ்வும் இல்லை என தமிழர்கள் அனைத்தையும் இழந்த நிலையில் கைவிடப்பட்டுள்ளார்கள் என நம்புகின்றனர்.
புதிய ஆட்சியில் ஓர் இரு நாட்களில் சரத்பொன்சேகா புதுப்பதவி பெற்று புன்முறுவல் அடைந்தார். சிராணி பண்டாரநாயக்கா மீண்டும் அரியாசனம் ஏறினார்.
அனைத்திற்கும் காரணமான ஒட்டுமொத்த வாக்குகளையும் அள்ளி அள்ளி போட்ட தமிழர்கள் கேட்பதற்கு யாருமற்ற அனாதைகளாயினர். எப்படி இதயங்களை இணைக்க போகிறார் ஜனாதிபதி என தெரியவில்லை?
வடகிழக்கு இணைந்த மண்ணில் தமிழ் மொழி பேசும் தமிழ் முஸ்லீம் இன மக்கள் ஒன்றாக வாழவும் ஒரு கௌரவமான தீர்வை நோக்கி நகர்வதற்கு முன் பல்வேறு அடிப்படை பிரச்சனைகளை தமிழர் மண்ணில் புரையோடியுள்ளது என்பதை,
ஆட்சி மாற்றத்தை கொண்டுவந்த ஜனாதிபதி பிரதமர் மற்றும் சந்திரிக்கா அம்மையார் உட்பட சர்வதேச நாடுகளும் உணர்ந்து கொண்டு தமிழ் பேசும் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காக தீர்மானங்களை எடுக்க முன்வர வேண்டும்.
இல்லாதவிடத்து தமிழர்களை மீண்டும் ஒரு தடைவ ஏமாற்றிய வரலாறுக்கு சொந்தக்காரர் ஆவார்கள் என்பதை மறந்து விடக்கூடாது என தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து நடைபெற்ற நன்னீர் மீன்பிடிச்சங்க மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 20 பயனாளிகளுக்கான மீன்பிடி வலைகள் மற்றும் அதற்கான ஏனைய பொருட்களை வழங்கி வைத்தார்.