தமிழ் மக்களின் அரசியல் சரித்திரத்தில் எதிர்வரும் 2016ம் ஆண்டானது அதி முக்கியமான வருடமாக இருக்குமென நான் நம்புகின்றேன். அடுத்த வருடத்திற்குள் இந்த நாட்டில் நீண்டகாலமாக தமிழ் மக்களுக்கு நடைபெறாத பல விடயங்கள் நடைபெறவுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவரும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினை தற்போது இந்த நாட்டில் மட்டும் ஏற்றுக் கொண்ட பிரச்சினையல்ல. எமது பிரச்சினை முன்னெப்போதுமில்லாதளவுக்கு சர்வதேச மயமாக்கப்பட்ட ஒரு பிரச்சினையாகும்.
இன்று சர்வதேச சமூகம், சர்வதேச நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை என்பன இலங்கை மீது அவதானம் செலுத்தியுள்ளன.
இலங்கையில் நிரந்தரமான சமாதானம் நிரந்தரமான புரிந்துணர்வு, நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட்டு அதன் அடிப்படையில் தீர்வு வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்றது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நேரத்தில் நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக ஒருமித்து எங்களுக்குள் இருக்கின்ற பிரச்சினைகளை நாங்களே பேசி தீர்த்துக் கொண்டு கருமத்தை முன்னெடுக்க வேண்டியது அத்தியாவசியமாகும்.
இந்த உதவியை அனைவரும் வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன் எனவும் இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை காணும் செயற்பாட்டில் சுதந்திரத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் எவ்விதமான முன்னேற்றகரமான செயற்பாடுகளும் இடம்பெறாத நிலையில் தற்போது அதற்கானதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக நம்பப்படுகிறது.
விசேடமாக புரையோடிப்போய்க் கிடக்கின்ற தேசிய இனப்பிரச்சினைக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டியது அவசியம் என பரவலாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மட்டங்களில் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
அதாவது இனப்பிரச்சினைக்கு நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வுத் திட்டமொன்று காணப்படுவது மிகவும் அவசியம் என்ற விடயம் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் எதிர்வரும் 2016ம் ஆண்டில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிச்சயம் அரசியல் தீர்வு காணப்படுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் பல தடவைகள் சுட்டிக்காட்டி வந்துள்ளார்.
2016ம் ஆண்டில் இந்த நாட்டில் அரசியல் தீர்வு காணப்படும் என்று பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னரே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அடிக்கடி கூறிவந்திருந்தார்.
அதனடிப்படையிலேயே தற்போது மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அரசாங்கம் அமைந்துள்ள நிலையில் இரா. சம்பந்தன் கூறியதுபோன்று தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணும் நோக்கில் கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அவை வெற்றியடையவில்லை.
தீர்வைக் காணும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் சமரச முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்தன.
இந்நிலையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட நிலைமையைப் போலல்லாது எதிர்வரும் காலங்களில் தீர்வை அடையும் நோக்கில் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமானதாக அமையவேண்டும் என்ற விடயம் வலியுறுத்தப்படுகின்றது.
இந்நிலையில் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் அரசாங்கத்தின் சார்பில் கருத்து வெளியிட்டுள்ள நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச நாட்டின் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்கின்ற வகையிலான அரசியல் தீர்வுத்திட்டத்தை உள்ளடக்கும் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
இனப்பிரச்சினைக்கு அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்துக்கு உட்பட்டு தீர்வைக் காண்பதா அல்லது அதற்கு அப்பாற்பட்டு தீர்வுக்கு செல்வதா என்பது குறித்து இதுவரை தீர்மானம் எடுக்கப்படவில்லை.
அனைத்து தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னரே இந்த விடயம் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும். இது தொடர்பில் அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
அத்துடன் பாராளுமன்றம் அரசியலமைப்புப் பேரவையாக மாற்றப்பட்டு புதிய அரசியலமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவானது பாராளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றியமைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்றும் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச சுட்டிக்காட்டியிருக்கிறார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வைக் காணும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ள நிலையில் அந்த நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து விரைவில் நியாயமான அரசியல் தீர்வொன்றை காண்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
விசேடமாக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமானது இந்த தேசிய இனப்பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக சர்வகட்சி குழுக் கூட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இந்த சர்வகட்சி மாநாட்டு செயற்பாட்டின் ஊடாக விரைவில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து அரசியல் தீர்வைக் காண்பதற்கு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இதன் மூலம் தீர்வுக்கான சாத்தியக்கூறுகள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
எனினும் ஒருவேளை இந்த சர்வகட்சி மாநாட்டின் செயற்பாடுகள் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண முடியாத நிலை ஏற்படுமானால் அரசாங்கம் உடனடியாக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகும்.
அவ்வாறு இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவதன் மூலம் விரைவாக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும்.
மிகவும் விசேடமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் மீது தமிழ் பேசும் மக்கள் பாரிய நம்பிக்கையை வைத்துள்ளனர்.
அந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய அரசாங்கம் தீர்வுக்கான ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுக்கவேண்டியது முக்கியமானதாகும்.
தேசிய இனப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வைக்காண வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையும் சர்வதேச சமூகமும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.
கடந்த காலங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டிருந்த பிரேரணைகளில் கூட தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
எனவே இந்த விடயத்தில் தொடர்ந்தும் இழுத்தடிப்புக்களை செய்து கொண்டிருக்க முடியாது. விரைவாக இது தொடர்பில் ஆரோக்கியமான நடவடிக்கைகளை அரசு தரப்பு முன்னெடுக்கவேண்டும்.
இந்த நாட்டில் அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் கடந்த காலங்களில் பல்வேறு பரிமாணங்களைப் பெற்றிருந்தன. ஆனால் எந்தவொரு முயற்சியினாலும் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தீர்வுத் திட்டத்தை பெற முடியாமல் போனது.
எனவே இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் மற்றும் சமூக நிறுவனங்களும் மத அமைப்புக்களும் மிகவும் ஆழமாக சிந்தித்து அர்ப்பணிப்புடன் பங்களிப்பு வழங்கவேண்டியது கட்டாயமாகும்.
அவ்வாறு இதய சுத்தியுடனான பங்களிப்பை செலுத்தினால் மட்டுமே நியாயமான மற்றும் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தீர்வை காண முடியும்.
மைத்திரி – -ரணில் ஆட்சிக் காலத்திலாவது இந்த அரசியல் தீர்வுப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற மக்களின் நம்பிக்கை சிதறடிக்கப்பட்டு விடக்கூடாது என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம்.