‘அரசியல் அறிவிலி’ செல்வம் அடைக்கலநாதனுக்கு ஓர் பகிரங்க மடல் !!!

354

 

தமிழ் அரசியல் கைதிகள் விடிவிக்கப்படாவிடின், 2016ம் வருடத்துக்கான வரவு-செலவுத்திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அறிவித்துள்ளார்.
0d69ac7a-e53b-45a5-9bf6-0b2e1867e222
இந்த முடிவு தமது கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் 06.12.2015 அன்று எடுக்கப்பட்ட முடிவு என்றும் அவர் வேறு தெரிவித்துள்ளார்.
ரெலோ அமைப்பில், ஸ்ரீ காந்தா-டெனிஸ்வரன் போன்ற சட்ட அறிவுள்ளவர்கள், சிவாஜிலிங்கம்-ஜெனா போன்ற ஓரளவுக்கு அரசியல் தெளிவுள்ளவர்கள் எல்லாம் உள்ளநிலையில், எப்படி செயற்குழுக்கூட்டத்தில் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டது? என்பது வியப்பாகவே உள்ளதோடு, அவர்கள் எப்படி இந்த முடிவுக்கு உடன்பட்டார்கள்? என்பதும் பெருத்த கேள்வியாக தொக்குநிற்கின்றது.
பட்ஜெட் புறக்கணிக்கப்பட வேண்டியதே! – அது ஏன்? எதற்காக?
மெய்யாகவே பட்ஜெட் தோற்கடிக்கப்பட வேண்டியது. ஆயினும் அதனை தோற்கடிக்கும் மனோநிலையில் நாடாளுமன்றத்துக்குள் அங்கம் வகிக்கும் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தைச்சேர்ந்த சிறுபான்மை கட்சிகளோ, இதர எதிர்க்கட்சிகளோ இல்லை. மிகவும் சிக்கலான இந்த கூட்டு தேசிய அரசாங்கத்துக்குள் குறித்த கட்சிகள் ஏதோவொரு வகையில் அமைச்சர் அந்தஸ்து அல்லது அதற்கு சமமான பதவிகளை பெற்று அங்கத்துவம் வகிப்பதால், (தமிழ் தேசியக்கூட்டமைப்பு உட்பட) அவை பலமிழந்து காணப்படுகின்றன.
ஆயினும் தமக்கு வாக்களித்த மக்களின் அரசியல் அபிலாசைகள், தேவைகள், விருப்புகள் வெறுப்புகளை மட்டுமே கவனத்தில் கொண்டு, அந்த மக்களின் நலனை மட்டுமே முன்னிறுத்தி கொள்கை வழி செயற்படும் ஒரு கட்சியாயின் பட்ஜெட்டை புறக்கணிக்கலாம்.
வடக்கு கிழக்கு மாகாணத்தில் பெரும்பாலான தமிழ் மக்களின் வாக்குகளை சுவீகரித்த தமிழ் தேசியக்கூட்டமைப்பை பொறுத்தவரையில், பட்ஜெட்டை புறக்கணிப்பதற்கு அதி உச்சமாக இரண்டே இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்க முடியும்.
ஒன்று:
2016ம் வருடத்துக்கான வரவு செலவுத்திட்டத்தில் 306.7 பில்லியன் ரூபாய்கள் (30 ஆயிரத்து 670 கோடி) நாட்டின் பாதுகாப்பிற்காக (பொலிஸ் மற்றும் முப்படைகளினதும் பயிற்சி – பராமரிப்பு – ஊதியத்துக்காக) ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் ஒதுக்கப்பட்டதை விடவும், பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள 306.7 பில்லியன் ரூபாய்கள் இலங்கை வரலாற்றில் இதுவரையில் இல்லாத அதிகபட்ச ஒதுக்கீடாகும்.
மேலும் ஒன்பது மாகாணங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள 237.9 பில்லியன் ரூபாய்கள் நிதியை விடவும்  பாதுகாப்பிற்காக 67வீதம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதை கணக்கிட முடிகின்றது.
கொதிக்கும் எண்ணெய்யிலிருந்து எரியும் அடுப்புக்குள் விழச்சொல்லும் சம்பந்தனின் இராசதந்திரம் !!!
இனி விடையத்துக்கு வருவோம். தமிழர் தாயகப்பிரதேசமான வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து இராணுவத்தை வெளியேற்றி சிவில் சமுக நடவடிக்கைகளுக்கு இயல்புநிலையை ஏற்படுத்துமாறு வலியுறுத்தி பலதரப்பட்ட சிவில் சமுக மனித உரிமை அமைப்புகளும் கடந்த ஆறு வருடங்களாக போராடியே வருகின்றன. சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் வடக்கு கிழக்குக்கு பயணம் செய்து களநிலைவரங்களை கேட்டறியும்போதும் இராணுவ பிரசன்னத்தையே ஒரு பூதாகரமான பிரச்சினையாக காட்டுகின்றார்கள்.
நிலைமை இப்படியிருக்கும்போது, தமிழ் மக்களின் வரிப்பணத்தில், தமிழ் மக்களின் பூர்வீக நிலபுலங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தை பராமரிப்பதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள பட்ஜெட்டை கூட்டமைப்பு எப்படி நியாயபூர்வமாக ஆதரிக்க முடியும்? லொஜிக் எங்கேயோ உதைக்குதே!
இரண்டு:
2009 மே மாதம் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், மகிந்த ராஜபக்ஸ அரசால் நிறைவேற்றப்பட்ட அனைத்து வரவு-செலவுத்திட்டங்களிலும் போரினால் ஏற்படுத்தப்பட்ட சொத்தழிவுகள், உயிரிழப்புகள், அங்கவீன இழப்புகளுக்கு நஸ்டஈடுகளையும், பெண்களை தலைமைத்துவமாகக்கொண்ட குடும்பங்கள், முன்னாள் போராளிகள், கடும்காயமுற்று விசேட தேவைக்குட்பட்டோருக்கு வாழ்வாதார திட்டங்கள் – தொழில்வாய்ப்புகளையும் ஏற்படுத்துமாறு வலியுறுத்தியும், அந்த கோரிக்கைகள் எல்லாம் செவிடன் காதில ஊதிய சங்கொலியாய் போய்விட்டது.
புதிய அரசாங்கத்தின் 2016ம் வருடத்துக்கான வரவு செலவுத்திட்டத்திலும் கூட போரால் கடுமையாக பாதிக்கப்பட்டு ஆறரை வருடங்கள் கடந்தும் அதன் பாதிப்புகள் – தாக்கங்களிலிருந்து விடுபட்டு மேலெழுந்துவர முடியாமல் முணங்கிக்கொண்டிருக்கும் வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்கு எத்தகைய நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை. மாறாக, பாதுகாப்பு படையினருக்கே சலுகைகளை அது வாரி இறைத்துள்ளது.
இந்த இரண்டு விசயங்களுமே பட்ஜெட்டை புறக்கணிக்கும் முடிவுக்கு சரியான காரணங்களாக கூற முடியும்.
பட்ஜெட்டை முன்னிறுத்தி ஒரு அரசின் பொருளாதாரக்கொள்கையையும், நாட்டின் அபிவிருத்தியையும் சரியாக எடைபோட்டு விடமுடியும். அது யாரால் முடியும் என்றால், பொருளாதாரம் தொடர்பான கல்வியறிவு உள்ளவர்களால் மட்டுமே முடியும்.
தனக்கு தானே முட்டாள் பட்டம் சூட்டிக்கொள்ளும் செல்வம் !!!
ஆனால் செல்வம் அடைக்கலநாதனோ, பொருளாதாரக்கல்வி தொடர்பான அறிவுமில்லாமல், அரசியல் தெளிவுமில்லாமல் அறிவிலித்தனமாக பட்ஜெட்டுக்கும்  – அரசியல் கைதிகளுக்கும் முடிச்சுப்போட்டு அறிக்கை விட்டுள்ளார். அந்த ஒரேயொரு அறிக்கை மூலம் இந்தப்பெரிய சமுகத்தில் இருக்கக்கூடிய பேராசிரியர்கள், கலாநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்களை முட்டாள்கள் ஆக்கிவிடலாம் என்றும் தப்புத்தப்பாய் கணக்குப்போட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்கு பூஜ்ஜியம் மைனஸ் பெறுமானத்தை தரும் வரவு-செலவுத்திட்டம், அதன் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொண்டு ஆதரவாக வாக்களித்தமையை கண்டித்து பொதுமக்களிடமிருந்து எழும் விமர்சனங்கள் – எதிர்ப்புகளையடுத்து, தனது அந்த முட்டாள்த்தனமான முடிவை பூசி மெழுகி சரிகட்டிவிடலாம் என்ற நினைப்பில் அரசியல் கைதிகள் தொடர்பில் தான் ஏதோ அக்கறையுடன் இருப்பதுபோல பாசாங்கு பண்ணி அறிக்கை விடுத்துள்ளார்.
பட்ஜெட்டுக்கும் – அரசியல் கைதிகளுக்கும் என்ன சம்பந்தம் விளக்கம் தருவாரா செல்வம்? 
இல்லாவிட்டால், உலகெல்லாம் இருக்கக்கூடிய பெரும்பாலான அரசியல் தலைவர்கள், ‘தம்மை ஆளாக்கியது – தம்மை செதுக்கியது – தம்மை வழி நடத்துவது’ இன்ன புத்தகம் தான் என்று, தாம் வாசித்த, உலகப் புரட்சியாளர்களின் புத்தகங்கள் தொடர்பில் பொதுவெளியில் மனம் திறந்து பேசுவார்கள்.
அதுபோல, செல்வம் அடைக்கலநாதனும் தான் வாசித்த ஏதேனும் ஒரு அரசியல், சமுக விஞ்ஞான அறிவியல் புத்தகம் தொடர்பில் பகிரங்கமாக கூற முடியுமா?
SHARE