பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தங்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகள் தொடர்பில் வேண்டுமென்றே அநீதியான போக்குகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்று தெரிவித்து, அதை ஆட்சேபித்து உலகுக்கு உண்மையை எடுத்தியம்பும் நோக்குடன் இரு தமிழ் அரசியல் கைதிகள் நேற்று புதன்கிழமை மீண்டும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர்.

அவர்களுள் ஒருவர் முருகையா கோமகன் (வயது 33) யாழ்ப்பாணம் கொடிகாமத்தைச் சேர்ந்தவர். யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர். விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் இவருக்கு எதிராக வவுனியா மற்றும் கொழும்பு நீதிமன்றங்களில் இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இரண்டு வழக்குகளிலுமே அவருக்கு எதிரான பிரதான ஆதாரமாக தடுப்புக்காவலில் இருந்த சமயம் பொலிஸ் அதிகாரிக்கு அவர் வழங்கியதாகக் கூறப்படும் குற்றஒப்புதல் வாக்குமூலம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்தக் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் குறித்து விசாரணை நடத்திய வவுனியா மேல்நீதிமன்றம் அந்தக் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் எதிரியினால் சுயாதீனமாக வழங்கப்பட்டதல்ல என்று முடிவு செய்து அதன் அடிப்படையில் எதிரிக்கு எதிரான அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது. அந்தக் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஏற்புடையதல்ல என வவுனியா மேல்நீதிமன்றம் தீப்பளித்த பின்னரும் அதனைப் பின்பற்றாமல் கொழும்பு மேல்நீதிமன்றம் அவருக்கு எதிரான வழக்கில் அதே குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்பதா என்பது தொடர்பில் பிறிதொரு விசாரணையை நடத்த பூர்வாங்கமாகத் தீர்மானித்திருந்தது. அடிப்படை சட்ட முறைமைகளுக்கு மாறான நடவடிக்கை இது எனத் தெரிவித்து கோமகன் தரப்பு சட்டத்தரணி அதனை ஆட்சேபித்திருந்தார். அப்படி விசாரணை நடத்த முயற்சித்தால் அந்தச் செயற்பாட்டுக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படும் எனவும் கோமகன் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பின்புலத்தில் 2010 ஓகஸ்ட் 23ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு ஐந்து வருடங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் அவருக்கு எதிராக உள்ள வழக்குகளை முன்னெடுக்க முடியாத அரசுத் தரப்பு இப்போது புதிதாக புதிய ஒரு வழக்கைத் தாக்கல் செய்யத் தீர்மானித்திருப்பதாக நீதிமன்றத்தில் அரசுத் தரப்பினால் கூறப்பட்டுள்ளதாம். இந்த முயற்சி அநீதியானது, சட்ட நடைமுறைகளுக்கு மாறானது என்று தெரிவித்து கடந்த புதனன்று கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் கோமகன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார் இதேசமயம் 2006ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தடுத்துவைக்கப்படடிருக்கும் சிவராஜா ஜெனீபன் என்பவர் தமது வழக்கில் சாட்சி என்று கூறப்படும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கடந்த ஆறு வருடங்களாக நீதிமன்ற விசாரணைகளுக்கு சமுகம் தராத சூழ்நிலையில் தமக்கு எதிரான வழக்குத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் நீதிமன்றமோ அரச சட்டவாதியோ தீர்மானம் எதனையும் எடுக்காமல் அநியாயமான முறையில் இழுத்தடிப்பதை உலகுக்கு அம்பலப்படுத்துவதற்காகத் தாம் உண்ணாவிரதத்தில் குதிப்பதாகக் குறிப்பிட்டு கடந்த சில தினங்களாக உணவருந்தாமல் தவிர்த்து வருகின்றார். யாழ்ப்பாணம் சிறையில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த ஜெனீபனும் இப்போது கொழும்பு மகஸின் சிறைக்கு மாற்றப்பட்டிருக்கின்றார் எனத் தெரிகின்றது.