இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 122 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட நியூசிலாந்திற்கு சென்றுள்ளது.
இதில் நியூசிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டுனெடினில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன் படி முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 431 ஓட்டங்கள் எடுத்தது. அதே போல் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 294 ஓட்டங்கள் சேர்த்தது. 137 ஓட்டங்கள் முன்னிலையில் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 267 ஓட்டங்கள் எடுத்திருக்கும் போது தனது 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. அப்போது நியூசிலாந்து அணி 404 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. இதனால் இலங்கை அணிக்கு 405 ஓட்டங்கள் வெற்றி இலக்காக கொடுக்கப்பட்டது. கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்க வீரர் கருணாரத்னே 29 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஜெயசுந்தரே 3 ஓட்டங்களில் வெளியேறினார். நிதானமாக ஆடி வந்த குஷால் மெண்டீஸ் 46 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். நேற்றைய 4வது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 109 ஓட்டங்கள் எடுத்திருந்தது. சந்திமால் (31), மேத்யூஸ் (0) களத்தில் இருந்தனர். 7 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் 296 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என இன்று கடைசி நாள் ஆட்டத்தில் இலங்கை களமிறங்கியது. தொடர்ந்து ஆடிய அணித்தலைவர் மேத்யூஸ் (25) நிலைக்கவில்லை. சந்திமால் (58) நிதானமாக ஆடி அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். விதானகே (38), சிறிவர்த்தனே (29) தங்கள் பங்கிற்கு ஓரளவு ஓட்டங்கள் குவித்தனர். பின்னர் வந்தவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இலங்கை அணி 282 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் நியூசிலாந்து 122 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக குப்தில் தெரிவு செய்யப்பட்டார். இந்த வெற்றி மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து 1-0 என முன்னிலையில் உள்ளது. |