கடந்த 10-12-2015 அன்று புனர்வாழ்வுக்கு சென்று பின் வந்து தமது பட்டப் படிப்பினை யாழ் பல்கலைக்கழகத்தில் பூர்த்திசெய்த பட்டதாரிகளுக்கும் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு, யாழ் குருநகரில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி திணைக்கள மாகாணப் பணிமனையில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது குறித்த பட்டதாரிகள் கடந்த கால யுத்தத்தில் மிகவும் பாதிக்கப்பட்டதாலும், அத்தோடு இன விடுதலைக்காக யுத்தத்தில் தம்மை ஈடுபடுத்தியிருந்தமையால் தமது பட்ட படிப்பை பூர்த்தி செய்யமுடியாத நிலை காணப்பட்டதாலும், இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் முடிவடைந்து பின் புனர்வாழ்வுக்கு சென்று திரும்பிய பின்னர் தாம் தமது பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளதாகவும், குறிப்பாக வடக்கு மாகாணம் முழுவதுமாக சுமார் 36 பட்டதாரிகள் இவ்வாறு புனர்வாழ்வு பெற்ற பின்னர் தமது பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ள நிலையில் இவர்களுக்கு தற்போது வயது மற்றும் குடும்ப நிலவரம் என்பன மிகவும் கஷ்டமான நிலையில் இருப்பதால், தம்மை அரச சேவையில் உள்ளீர்ப்பு செய்து கொள்ளுமாறு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும், அதற்க்கு அமைச்சர் தமது கருத்தில் இவ்வாறனவர்களுக்கு தாம் முன்னுரிமை வழங்குவதாகவும், அவர்களது சுய விபரக் கோவை, புனர்வாழ்வு பெற்ற பத்திரங்கள், பட்டத்திற்கான சான்றிதழ் என்பனவற்றை பிரதி செய்து தமது அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பிக்குமாறும், எதிர்வரும் ஆண்டில் தனது அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களுக்கு உட்பட்ட வேலைத் திட்டங்களுக்கு தாம் அரச சேவையில் உள்ளீர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் இதற்க்கான ஆரம்ப வேலைகளை தாம் முன்னெடுப்பதாகவும் அவர்களுக்கு தெரிவித்தார்.
இந்த விசேட சந்திப்பில் அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன் அவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.