முல்லைத்தீவு முள்ளியவளைப் பகுதியில் 200 மாணவர்களுக்கு ரூபா 50000 பெறுமதியான குறிப்புநூல்கள் வழங்கப்பட்டன. வடமாகாணசபை உறுப்பினர் மதிப்பிற்குரிய துரைராசா ரவிகரன் அவர்கள் இவ்வுதவியை செய்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பிரான்சில் வசிக்கும் புலம்பெயர் உறவான பாலராஜ் ஜனார்த்தனன் அவர்களின் 12வது பிறந்த தினத்தை முன்னிட்டு கடந்த 2015.12.06ம் திகதி முள்ளியவளை மாமூலைப் பகுதியில் மேற்படி உதவிகள் ரவிகரன் அவர்களால் வழங்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை “துளிர்களிற்கு மழையாய்” என்ற கருப்பொருளுடன் முல்லைத்தீவில் செயலாற்றிவரும் “வெளிச்சம்” அமைப்பினர் ஒழுங்கு செய்திருந்தனர்.
குறித்த நிகழ்வு தொடர்பாக ரவிகரன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
2015ம் ஆண்டிற்கான கல்விச்செயற்பாடுகள் பாடசாலைகளில் தற்பொழுது நிறைவு பெற்றுள்ளன. அடுத்த ஆண்டில் புதிய தரத்திற்கு நுழையவிருக்கும் மாணவர்களுக்கான குறிப்புநூல்களை வாங்கிக்கொடுக்கும் நிலை அனைத்து பெற்றோருக்கும் இலகுவானதாக அமைவதாயில்லை.
வறுமைக்குட்பட்ட நிலையில் கல்வியைத்தொடரும் மாணவர்களுக்கான ஒரு ஊக்குவிப்பாகவே இச்செயற்பாடு அமைகிறது. பங்களித்த ஈழப்புலம்பெயர் சிறுவனுக்கும் அவர்தம் பெற்றோருக்கும் நன்றிகளை நெஞ்சார்ந்து தெரிவிப்பதோடு இதற்கான ஏற்பாடுகளை களத்தில் நின்று செயலாற்றிய வெளிச்சம் அமைப்பினருக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன்.
தொடர்ந்தும் இவ்வாறான மாணவர் ஊக்குவிப்புகள் ஈழமண்ணில் தொடரவேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள், வெளிச்சம் அமைப்பின் தலைவர் லோகேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள், மாணவர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.