பிரதமர் ரணிலுக்கு எதிராக ஜெனீவாவில் முறைப்பாடு- தூண்டுவது மகிந்த அணியா?-

282

இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடு ஒன்று செய்யவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்க நடவடிக்கைகளை அச்சுறுத்தியதாக தெரிவித்தே இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் அச் சங்கம் அறிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது சிறப்புரிமையைப் பயன்படுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் பாதனிய மற்றும் சங்க உறுப்பினர்களை கடுமையாக விமர்சித்திருப்பதாக சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளதுடன் பிரதமர் தனது கருத்தை வாபஸ்பெற வேண்டும் என்று சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் நவீன் . சொய்சா தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தமது சங்க தலைவர் வக்காளத்து வாங்குவதாக பிரதமர் ரணில் கூறியிருப்பதாகவும் அப்படியெனில்  மகிந்த ஆதரவு தொழிற்சங்கங்களோ, எந்தவொரு தொழிற்சங்கங்களோ சுயாதீனமாகச் செயற்படமுடியாது என்று பிரதமர் கூறுகிறரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ரெஜிமெண்டாக செயற்படுகிறது என்றும் மகிந்த ராஜபக்சவின் தேவைகளை நிறைவேற்றுவதே அச் சங்கத்தின் நோக்கம் என்றும் பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டிப் பேசியிருந்தார். இந்த நிலையிலேயே இவ்வாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஒப்பமிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைப் பேரவைக்கு பிரதமருக்கு எதிராக கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாகவும் சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் நவீன் . சொய்சா மேலும் தெரிவித்தார்.

SHARE