உண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட காணமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு சர்வதேசத்தை ஏமாற்றும் ஒரு நாடகமே தவிர காணமல் போன உறவுகளை கண்டிபிடிக்கவே அவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவே இது உறுதுணையாக அமையாது என்று தான் கூறவேண்டும்.
அந்த வகையில் யாழில் கடந்த 14ம் திகதி தொடங்கிய முறைப்பாடுகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதில் காணாமல் போன உறவுகள் அனைத்தும் சாட்சி செல்லியதா? என்ற கேள்வி மறுபுறம் எழுகின்றது.
இவ்வாறான ஒருநிலையில் முதலாம் நாள் கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 10 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கான சாட்சியங்களை பதிவு செய்தும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டது.
கடிதம் அனுப்பப்பட்ட 66 பேரில் ,48 பேர்களின் சாட்சியமே பதிவு செய்யப்பட்டது. ஆனால் 106 பேர் சாட்சியமளிப்பதற்கு வருகை தந்து காத்திருக்க,.
ஆணைக்குழுவினர் எல்லோரையும் இன்றைய தினம் விசாரணை செய்ய முடியாது, இன்றைய தினம் அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே விசாரணை செய்யப்படுவார்கள் என்று கூற அதற்கு காணமல் போன உறவுகளின் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஏன் எங்கள் பிள்ளைகள் காணமல் போன உறவுகளுக்குள் அடங்கவில்லையா? நாங்கள் இறப்பதற்கு முன்னராவது எங்கள் பிள்ளைகளை கண்டுபிடித்து தாருங்கள், இன்று விசாரணை செய்யவில்லை என்றால் எப்போது விசாரணை செய்வீர்கள்? என ஆணைக்குழுவிடம் கேள்வி
எழுப்பினர்.
அதற்கு ஆணைக்குழுவினர் நான்கு நாட்கள் மட்டுமே யாழில் விசாரணைகளை மேற்கொள்ள வந்துள்ளோம். எனவே நாட்கள் போதாது என கூறினார்கள்.
நாட்கள் போதாது என்றால் நாட்களை அதிகரிக்க வேண்டியது உங்கள் கடமை கிளிநொச்சியிலும் அவ்வாறு தான் கூறுவிட்டு வந்துள்ளீர்கள் இங்கும் அதே பதிலை கூறுகின்றீர்கள் எங்களை ஏமாற்றாதீர்கள் என்று உறவுகள் கண்ணீரால் கேள்விகளை கேட்டனர்.
ஆனால் ஆணைக்குழுவினர் இதற்கு சரியான பதிலை வழங்காமல் முதல் நாளே மழுப்பத் தொடங்கிவிட்டார்கள். அந்த பதிலையே அடுத்த மூன்று நாட்களிலும் காணமல் போன உறவுகளுக்கு கூறி தப்பித்துக் கொண்டனர்.
சாட்சிப் பதிவு ஆரம்பமாகியது முதலாவது சாட்சிப் பதிவே இராணுவத்திற்கு எதிரான காணப்பட்டது. அதாவது விடுதலைப் புலிகள் அமைப்பின் மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளராக இருந்த றேகா (ரேகன்) என்பவரை இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் சிறிலங்கா இராணுவத்தினரிடம் தாம் ஒப்படைந்ததாக அவரது மனைவி பகிரங்கமாக தெரிவித்தார்.அதற்கு ஆணைக்குழுவினர் நீங்கள் ஒப்படைந்த இராணுவ அதிகாரியினை அடையாளம் காட்ட முடியுமா? என கேள்வி எழுப்பினர் அதற்கு என்னால் குறித்த இராணுவ அதிகாரியினை அடையாளம் காட்ட முடியும் என அவர் தெரிவித்தார்.
அவரது சாட்சி மிகப்பெரிய உண்மையினை இந்த அரசிற்கும், சர்வதேச நாடுகளுக்கும் வழங்கியுள்ளார். விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் இராணுவத்தினரிடமே சரணடைந்தார்கள் அவர்களுடைய தற்போதைய நிலை என்ன என்ற கேள்வி எழுந்துவிட்டது.
அது ஒருபுறமிருக்க காணமல் போன உறவுகள் தங்களுடைய உறவுகள் இவ்வாறு தான் காணமல் போனார்கள் என்று ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க, ஆணைக்குழுவினர் ஒரு வெள்ளைத் தாளில் சிறுகுறிப்பு ஒன்றை எடுத்துக் கொள்வார்கள். இது தான் காணாமல் போனவர்கள் விசாரணை!
அதேபோல அடுத்த நாள் சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 13 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 59 பேர் சாட்சியத்திற்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் 49 பேர் சாட்சியமளித்திருந்தனர். அதேவேளை 93 பேர் சாட்சியமளிப்பதற்கு தயாராக இருப்பதாக பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்.
இங்கும் இராணுவத்தினருக்கு எதிகார சரமாரியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது, “நாவற்குழி இராணுவ அதிகாரியின் தலைமையில் கடந்த 1996.07.19 மறவன்புலவு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் எனது மகன்கள் இருவர் இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டு தலையாட்டிமுன் நிறுத்தப்பட்டனர்.
ஒரு மகன் வீட்டில் நிற்கும் போது சுற்றிவளைப்பில் பிடிக்கப்பட்டதுடன் மற்றைய மகன் வயலில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது அன்றைய தினமே பிடிக்கப்பட்டார்.
அவ்வாறு தலையாட்டியினால் அடையாளம் காட்டப்பட்டவர்களில் எனது மகன்மார் இருவரும் அடங்குவர் துமிந்த என்ற இராணுவ அதிகாரியின் தலைமையில் நடைபெற்ற சுற்றிவளைப்பிலேயே என் மகன் காணாமல் போனார் அவரைக் கேளுங்கோ எங்க பிடிச்ச பிள்ளைகள் எண்டு ஏன் எங்களை இப்பிடி கேள்வி எல்லாம் கேட்கிறியள்” என ஒரு தந்தையார் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இறுதி இரு நாட்களும் சாட்சியமளிப்புக்கள் யாழ். அரச செயலகத்தில் நடைபெற்றது.நேற்றைய நாள் பதிவு நடவடிக்கைகள் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டது.
04 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 67 பேர் சாட்சியத்திற்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில் 54 பேர் சாட்சியமளித்தனர். அதேவேளை 245 பேர் சாட்சியமளிப்பதற்கு தயாராக இருப்பதாக பதிவுகளை மேற்கொண்டனர்.
இதில் இராணுவத்தினரிடம் சரணடைந்த எனது மகள் குடும்பத்தை ஓமந்தையில் வைத்து இராணுவமும் கருணாகுழுவைச் சேர்ந்தவர்களும் பிடித்து இழுத்துச் சென்றதை கண்டதாக உறவினர்கள் கூறினர்.
என் மகள் குடும்பம் ஐவரும் காணாமல் போனதுக்கு இராணுவமும் கருணா குழுவும் தான் காரணம் என தாயொருவர் ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார்.
அடுத்து சரணடைந்ததவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்பதால் வட்டுவாகலில் இராணுவத்திடம் எனது கணவர் சரணடையும் போது அவருடன் விடுதலைப்புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களும் சரணடைந்தனர் என அரசியல் துறை பொறுப்பாளர் யோகியின் மனைவி ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளித்துள்ளார்.
அது ஒருபுறமிருக்க இறுதி நாள் சாட்சிப்பதிவுகள் இன்றைய தினம் யாழ்.அரச செயலகத்தில் நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மக்களுக்கான சாட்சியங்கள் பதிவுகள் இடம்பெற்று முடிவடைந்து விட்டன.
. நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 04 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 52 பேர் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில் பிற்பகல் 1.30 மணிவரையில் 25பேர் சாட்சியமளித்திருக்கின்றனர். அதேநேரம் 278 பேர் புதிதாக சாட்சியமளிப்பதற்கு தயாராக இருப்பதாக பதிவுகளை மேற்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இன்றுடன் காணாமல் போன உறவுகளின் சாட்சிப் பதிவுகள் முடிவடைந்துள்ளது இதில் இன்னொரு விடயம் என்னவென்றால் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் இன்றைய தினம் தனக்கு தலையிடிப்பதாக கூறி விசாரணையிலிருந்து வெளியேறிவிட்டார்.
உண்மையில் எதனை ஏற்றுக் கொள்ள முடியாது ஒரு ஆணைக்குழுவின் தலைவர் உறவுகள் தங்களுடைய உடன்பிறப்புக்கள், கட்டிய கணவன், பத்துமாதம் சுமந்து பெற்றெடுத்த பிள்ளை போன்றவர்களை காணவில்லை என்றுதான் உங்களிடம் சொல்ல வந்தார்கள் ஆனால் உங்களிடம் சொல்லியும் பிரியோசனம் இல்லை என்பதைப் போல் ஆகிவிட்டது ஆணைக்குழுவின் தலைவரின் நடவடிக்கைகள்.
இவ்வாறு நான்கு நாட்களும் காணாமல் போன உறவுகளின் கண்ணீரால் யாழ்.குடாநாடு நனைந்து விட்டது இவ்வாறு உறவுகள் தங்கள் உறவுகள் தொடர்பான தகவல்களை ஆணைக்குழுவிற்கு வழங்கிவிட்டார்கள் ஆனால் சாட்சி சொன்ன உறவுகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமா?
விசாரணை செய்யப்படாமல் இருக்கும் உறவுகளை எப்போது வந்து விசாரணை செய்வது? காணமால் போன உறவுகள் கூறிய சாட்சிகளுக்கு எவ்வாறான தீர்வு கிடைக்கப் போகின்றது? என்ற கேள்வி மறுபுறத்தில் எழுந்துள்ளது.
ஆணைக்குழு முன்னர் சாட்சியமளித்த உறவுகளின் கதைகள் ஒவ்வென்றும் எந்த ஒருதேசத்திலும் நடபெறாத உண்மைக் கதைகள்.
காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்த மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு அண்மையில் அதன் அறிக்கையை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளித்திருந்தது.
இந்நிலையில் குறித்த ஆணைக்குழுவின் விசாரணையின் போது முறைப்பாடு செய்யப்பட்ட வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பில் தற்போது தனியான விசாரணை மேற்கொள்ள குறித்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதற்கென உயர்நீதிமன்ற நீதியரசர்கள் உள்ளடங்கிய ஐந்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
இக்குழுவின் விசாரணையில் செனல் 4 தொலைக்காட்சி அல்லது இந்த விசாரணை குறித்து ஆர்வமுள்ள தரப்பினர் அளிக்கும் சாட்சியங்கள் தொடர்பில் ஆராய்வதற்கும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகளின் பின்னர் அடுத்த ஆண்டின் முற்பகுதிக்குள் வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவும் மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது.
வெள்ளைக்கொடி விவகாரம், இசைப்பிரியா கொலை தொடர்பில் ஐந்து பேர் அடங்கிய நீதிபதிகள் குழு விசாரணை
வெள்ளைக்கொடிகளுடன் சரணடைய வந்த விடுதலைப்புலிகள் படையினரால் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கையின் அரசாங்க பத்திரிகை இன்று தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு இந்த விசாரணையை நடத்தும் என்று அதன் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைக்கான குழு விரைவில் அமைக்கப்பட்டு சாட்சியங்களின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது செனல்4 தொலைக்காட்சியின் காணொளியும் கருத்திற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைக்காக ஐந்து பேரடங்கிய நீதிபதிகள் குழு அமைக்கப்படும். இந்தக்குழு பல மாவட்டங்களுக்கும் சென்று தகவல்களை திரட்டி தமது அறிக்கையை அடுத்த வருட முதல் பகுதியில் வெளியிடும் என்றும் பரணகம குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்தக்குழு இசைப்பிரியா படையினரால் கைது செய்யப்பட்ட கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலும் தமது விசாரணைகளை நடத்தும் என்று பரணகம தெரிவித்துள்ளார்.
எனினும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் வெள்ளைக்கொடி ஏந்திவந்த விடுதலைப்புலிகள் கொல்லப்படவில்லை என்று கூறிவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வெள்ளைக்கொடி படுகொலை சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கை 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும் என அந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திவரும் குழு அறிவித்துள்ளது.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட தினமான கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி வெள்ளைக்கொடியுடன் ஸ்ரீலங்கா அரச படையினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன், சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் உட்பட முக்கிய தளபதிகள் மற்றும் போராளிகள் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
வெள்ளைக்கொடி படுகொலை சம்பவத்தை மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கடந்த அரசாங்கம் முற்றாக நிராகரித்துவந்த நிலையில் கடந்த வாரம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் குறித்த சம்பவம் தொடர்பிலான ஆதாரங்கள் உண்மைத்தன்மை வாய்ந்தவை என்றும், அவை தொடர்பில் ஒரு நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
அது மாத்திரமன்றி இந்த சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் பல புதிய தகவல்களையும் சிறிலங்கா நாடாளுமன்றில் வெளியிட்டிருந்தனர்.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் வெள்ளைக்கொடி படுகொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காணாமல்போனோர் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
வெள்ளைக்கொடி படுகொலை குறித்த விசாரணைக்காக ஓய்வுபெற்ற பொலிஸ் உயர் அதிகாரியொருவரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த உயர் பொலிஸ் அதிகாரி சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் தொடர்பில் நிபுணத்துமிக்கவர் என்றும் மெக்ஸ்வெல் பரணகம குறிப்பிட்டுள்ளார்.