ஒரு வருடத்துக்குள் புதிய அரசமைப்பு! ஆராய்வதற்கென 12 பேர் கொண்ட குழுவை நியமித்தது

292

ஒரு வருடத்துக்குள் புதிய அரசமைப்பு சீர்த்திருத்தம் ஒன்றை நல்லாட்சி அரசு அமைக்கவுள்ளதாகவும், அதற்கான ஆலோசனைகள், கருத்துக்களை முன்வைப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 12 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளதாகவும் அக்கட்சி அறிவித்தது. இக்குழுவின் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதுடன், அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், அமைச்சர்களான சரத் அமுனுகம, மஹிந்த சமரசிங்க, பைஸர் முஸ்தபா, இராஜாங்க அமைச்சர்களான பௌசி, டிலான் பெரேரா, பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோருடன் மஹிந்த ஆதரவாளர்களான பந்துல குணவர்தன, பவித்ரா வன்னியாரச்சி மற்றும் கெஹலிய ரம்புக்வெல ஆகியோர் மேலதிக உறுப்பினர்களாக இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா இத்தகவலை வெளியிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:- “ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், நல்லாட்சி அரசு மக்களுக்கு வழங்கிய மேலும் பல வாக்குறுதிகள் உள்ளன. தேர்தல் சீரர்த்திருத்தம் அதில் பிரதானமான ஒன்றாகும். அத்துடன், புதிய அரசமைப்பு ஒன்றையும் நல்லாட்சி அரசு அறிமுகப்படுத்துவதாக வாக்குறுதி வழங்கியிருந்தது. இந்த வாக்குறுதியை இன்னும் ஒரு வருடத்துக்குள் நிறைவேற்றுவோம். அதில், எமது கட்சியின் ஆலோசனைகள், கருத்துக்களை முன்வைப்பதற்கு என்று கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைவாக 12 பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளோம். மத்திய செயற்குழுவும் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இக்குழு தமது ஆலோசனை அறிக்கையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய செயற்குழுவுக்கு விரைவில் வழங்கும். அதனை மத்திய செயற்குழு ஆராய்ந்து அனுமதி வழங்கிய பின்னர் புதிய அரசமைப்புக்குள் இணைத்துக் கொள்ள ஆலோசனை வழங்குவோம்” – என்றார்.

SHARE