அரசமைப்பு மறுசீரமைப்புக்காக மக்களின் அபிப்பிராயங்களைக் கேட்டறிவதற்காக 24 பேர் கொண்ட நிபுணர் குழுவொன்றை நியமிக்க அரசு உத்தேசித்துள்ளது. இதேவேளை, அரசமைப்பு மறுசீரமைப்புக்கான இணக்கப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்காக நாடாளுமன்றத்தை அரசமைப்பு சபையாக மாற்றுவதற்கான பிரேரணை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் எதிர்வரும் ஜனவரி 9ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான டாக்டர் ராஜித சேனாரட்ன மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- புதிய அரசமைப்பை அறிமுகப்படுத்துவதற்காக நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அரசமைப்பு மறுசீரமைப்புக்கான அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அரசமைப்பு மறுசீரமைப்புக்காக மக்களின் அபிப்பிராயங்களை அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடாக பெற்றுக்கொள்ளும் நோக்கில் குழுவொன்றை நியமிக்க அந்த அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. மக்களின் அபிப்பிராயங்களைப் பெற்றுக்கொள்வதற்காக 24 நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. இந்தக் குழுவானது 3 பேர் கொண்ட அணியாகப் பிரிந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கூட்டங்களை நடத்தி மக்கள் பிரதிநிதிகளின் அபிப்பிராயங்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்பதை அமைச்சரவை பரிசீலனை செய்துள்ளது. இதேவேளை, அரசமைப்பு மறுசீரமைப்புக்கான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்காக அரசமைப்பு சபையாக நாடாளுமன்றத்தைக் காட்டுவதற்கான பிரேரணை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 9ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்கவுள்ளார்.