அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்பாலான அதிருப்தியாளர்களால் பேரவையொன்றும் உருவாக்கப்பட்டு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் ஒன்றுகூடலும் இடம்பெற்றது. இந்த ஒன்று கூடலின் போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் கையாண்ட அணுகுமுறைகள் இவ்வமைப்பின் உருவாக்கத்தின் பின்னணியில் மைத்திரி ரணில் அரசானது உள்ளதா? என்னும் ஐயப்பாட்டைத் தோற்றுவித்துமுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் ஆரம்பித்து நாடாளுமன்றத் தேர்தல் இடையிட்டு இன்றுவரை தென்னிலங்கையில் ஆட்சியை மாறி மாறிக் கைப்பற்றிவரும் இரு பெரும் அரசியல் கட்சிகளான ஐ.தே.கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரு கட்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பார் எச்கட்சிக்கும் ஆதரவாளர்களாக இல்லாமல் நடுநிலையாளர்களாக இருப்பது மட்டுமே நியாயபூர்வமானதாகவுள்ளபோதுங்கூட அவர்கள் இரு தேர்தல்களின்போதும் ஐ.தே.கட்சிக்கு ஆதரவளித்தமை மட்டுமல்லாமல் தமிழ் மக்களை ஏமாளிகளாக்கும் போக்கில் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராஜா அவர்கள் நாம் மைத்திரி – ரணில் ஆட்சிக்கு அனுசரணையாக விளங்கித் தமிழ் மக்களை அவர்களுக்கு வாக்களிக்க வைத்தமையால் நன்றிக்கடனாக தமிழ் மக்கள் பிரச்சினையை ரணில் அரசானது திருப்திப்படுத்துமெனக் கூறித் தனது ஆற்றாமையை வெளிப்படுத்தியும் நின்றிருந்தார்.
உண்மையில் இலங்கையில் ஆட்சியமைக்கும் எந்தவொரு கட்சியும் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்த்துவைக்கப்போவதில்லையென்பதே உண்மையாகும்.
மேலும் சம்பந்தன் அவர்களுடைய வகிபாகத்துக்கு விக்னேஸ்வரன் அவர்களைக் கொண்டுவருவதற்காகக் கடந்த தேர்தலின்போது தோல்வியைத் தழுவியவர்கள் உட்பட சம்பந்தன் மீது ஈடுபாடற்ற பலரும் மேற்கொண்ட பிரயத்தனத்தின் பிரதிபலிப்பே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான அதிருப்தியின்பாற்பட்ட தமிழர் பேரவையாகும்.
இப்பேரவையானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சீர்குலைக்க உருவாக்கப்பட்டவொன்றாக இருப்பதால் இதன் பின்னணியில் மைத்திரி – ரணில் அரசானது உள்ளது என்னும் ஐயப்பாடு உள்ளது மட்டுமல்ல, மஹிந்த தரப்பினரிடமிருந்தும் தூண்டுதலொன்று உருவாகியிருக்கலாமெனக் கருவதற்கும் ஏதுநிலையுண்டு. வரவிருக்கும் உள்ளுராட்சித் தேர்தலின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குச் சார்பாகப் பிரச்சாரத்தில் ஈடுபடவிருப்பதாக ஜனாதிபதி மைத்திரி கூறியிருப்பது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை உசுப்பேற்றிவிட அவரின் சம்பந்தியான விக்னேஸ்வரன் அவர்களைப் பயன்படுத்தித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தச் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்னும் இரு கட்சிகளுமே இராஜதந்திரக் காய் நகர்த்தலில் ஈடுபட்டிருக்கலாமென எண்ணவும் தோன்றுகின்றது.
இப்பேரவையின் உருவாக்கத்தில், தென்னிலங்கையின் இருபெரும் கட்சிகளுமே தமிழர் விரோதப் போக்கைக் கொண்டிருக்கின்றன என்னும் கொள்கையுறுதிப்பாடுடைய ஒரு சிலரும் சம்பந்தன் அவர்களுடைய எதிர்க்கட்சித் தலைவர்ப் பதவியேற்புத் தொடர்பிலான அதிருப்தியின்பாற்பட்டு இணைந்திருந்தால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழ் மக்களுக்கும் பாதகமாகவே முடியும். எனவே இவ்வாறான கொள்கைவாதிகள் எச்சந்தர்ப்பத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருமைப்பாடு உடைந்து போகாதவாறு பாதுகாப்பதே சாலச் சிறந்ததாகும்.
மேலும் இப் பேரவையின் உருவாக்கம் வடக்கில் சம்பந்தன் அவர்களுடைய இடத்துக்கு விக்னேஸ்வரன் அவர்களை நகர்த்தும் எண்ணப் பாங்கு ஒன்று இழையோடுவதை அவதானித்த தென்னிலங்கையின் அதிகாரஞ் செலுத்தும் பிரிவினரான ஐ.தே.கட்சியின் ஒரு சாராரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இன்னொரு சாராரும் இணைந்தே மேற்கொண்டவொன்றாக இருக்க முடியுமெனக் கருதலாம்.
வடமாகாணசபைத் தேர்தலின்போது முதலமைச்சர் வேட்பாளர் தெரிவின்போது மாவையாருக்கும் ஏனைய சில புதியவர்களுக்குமிடையில் போட்டி நிலவியபோது மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது அரசாங்கத்தில் அமைச்சர்ப் பதவி வகித்த வாசுதேவ நாணயக்கார அவர்களின் சம்பந்தியான விக்னேஸ்வரன் அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக நியமனஞ் செய்வதற்குத் திரைமறைவில் வேலைசெய்தாரோ அதைப்போலவே தற்போதும் சம்பந்தன் அவர்களுடைய இடத்துக்கு விக்னேஸ்வரன் அவர்களை நகர்த்த முயலும் வடக்கின் அரசியல் கள அமைவைச் சாதகமாகப் பயன்படுத்தித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியத்தைச் சின்னாபின்னமாக்கிச் சீரழித்துத் தமிழ் மக்களின் உரிமைக்குரலை முற்றுமுழுதாக இல்லாதொழிப்பதற்கு ஐ.தே.கட்சியிலுஞ் சரி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுஞ் சரி ஒவ்வொரு சாரார் முழுமூச்சாக முயன்றுவருவதன் ஒர் அங்கமே விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழர் பேரவை என்னும் அமைப்பாகும்.
மூன்று தசாப்தகால ஆயுதப் போராட்டம் தோல்வியுறுவதற்குப் பிரேமதாஷ அவர்களின் குள்ளநரித்தனமான நடவடிக்கைகளினால் சின்னாபின்னமாகச் சிதைந்த ஆயுததாரிகளில் ஒரு சாராரின் இராணுவத்துடனான இணைவே பிரதானமான காரணியாக இருந்தமைபோல குரலளவில் மட்டுமே தற்போது ஆயுதப் போராட்டத்துக்கு முன்னர் இருந்தமைபோல எஞ்சியுள்ள தமிழர் உரிமைப்போராட்டமும் வேரும் வேரடி மண்ணுமில்லாமல் பூண்டோடு நசுக்கப்படுவதற்கும் விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய தமிழ் அமைப்பான பேரவையும் காரணியாக அமையக்கூடிய ஆபத்தும் உள்ளதென்பதைச் சுட்டிக்காட்டித் தமிழ்க் குறியீடுகளுடன் புதிய புதிய அமைப்புக்கள் ஆரம்பிக்கப்படுவது இன்னுந்தான் அரசியல் உரிமைகளைப் பெறமுடியாத நிலையில் அவல வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் மக்களுக்குள் இடம்பெறுவது அறிவுடமையாகாது என்பதை இச்சந்தர்ப்பத்தில் இடித்துரைக்க விரும்புகின்றோம்.