அடுத்த வருடம் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம்

318
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடப் பூர்த்தியை முன்னிட்டு அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தகவலை சிங்கள பத்திரிகை ஒன்று இன்று வெளியிட்டுள்ளது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைய, அமைச்சரவை 90 பேருக்கு வரையறுக்கப்பட்டுள்ளதோடு, இதில் 45 அமைச்சர்களும், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் என 45 பேரும் காணப்படுகின்றனர்.

தற்போது அமைச்சரவையில் 47 அமைச்சர்கள் உள்ளதோடு, 23 பிரதியமைச்சர்களும், 19 இராஜாங்க அமைச்சர்களும் உள்ளனர்.

இதுதவிர மஹிந்த ராஜபக்ச அணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி, மனுஷ நாணயக்கார, லக்ஷ்மன் செனவிரத்ன ஆகியோர் அமைச்சுப் பதவிகளை கோரியிருப்பதோடு, நிபந்தனைகளையும் முன்வைத்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் முன்னாள் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரும் அமைச்சுப் பதவிகளை கோரியுள்ளனர்.

எவ்வாறாயினும் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் அமைச்சரவையில் சில சில மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்திவருவதோடு, சில புதியவர்களும் பிரதியமைச்சர்களாக நியமிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE