தமிழ் மக்களின் அடைவின் இலக்குகள்! (புருஜோத்தமன் தங்கமயில்)

363

நல்லிணக்க அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படையாக வெளியிட ஆரம்பித்துவிட்டது. நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கைகளின் போக்கில் புதிய அரசாங்கத்துக்கான சந்தர்ப்பத்தையும், காலத்தையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கூட ஏரிச்சல் கலந்த எதிர்ப்பினை பாராளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும் முன்வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

தென்னிலங்கை அரசியல் நிகழ்ச்சி நிரலோடு மல்லுக்கட்டுதல் மற்றும் அதனூடான வெற்றி என்பது எப்போதுமே கல்லிலே நார் உரிப்பதற்கு ஒப்பானதுதான். ஆனாலும், ஆட்சி மாற்றமொன்றுக்கு கடந்த ஜனவரியில் ஒத்துழைத்த தமிழ்த் தரப்பு, ஆட்சி மாற்றம் பாராளுமன்றத் தேர்தலில் ‘உறுதி’ செய்யப்படும் வரையில் குறிப்பிட்டளவான நம்பிக்கைகளுடன் காத்திருந்தது.

இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள் இருக்கின்ற பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு, இராணுவத்தலையீடுகள் அகற்ற நிர்வாகம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, சட்டம் ஒழுங்கு சீராக்கம், ஆயுத மோதல்களினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு- கிழக்கின் மீள் கட்டுமானம் மற்றும் உள்ளக அபிவிருத்தி குறித்த நம்பிக்கைகளையே தமிழ் மக்கள் கொண்டிருந்தனர். அந்த நம்பிக்கைகளின் எச்ச சொச்சம் இன்னமும் இருக்கின்றது.

அப்படிப்பட்ட நிலையில், நல்லிணக்க அரசாங்கத்தின் போக்கு தமிழ் மக்களை மாத்திரமின்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நெகிழ்நிலைத் தலைவர்கள் என்று சொல்லப்படுகின்ற இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்களையே எரிச்சற்படுத்துமளவுக்கு மாறியிருக்கின்றது. குறிப்பாக, வாக்குறுதிகளை தொடர்ச்சியாக வழங்கும் அரசாங்கம், அதனை செயற்படுத்துவது தொடர்பில் நீண்ட இழுபறிகளை செய்கின்றது. அல்லது, அலைக்கழித்து அந்த விடயங்கள் பற்றிய அனைத்து நம்பிக்கைகளையும் நீக்கம் செய்கின்றது. அப்படியானதொரு நிலைப்பாட்டினை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் தமிழ்த்தரப்பு கடந்த நாட்களில் எதிர்கொண்டு வருகின்றது.

தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டங்களை ஆரம்பிக்கும் அனைத்து தருணங்களிலும், அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினூடு வாக்குறுதிகளை வழங்கி போராட்டங்களை நிறுத்த முனைந்திருக்கின்றது. ஆனால், வாக்குறுதிகள் தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்று வரும் போது அரசாங்கம் இதய சுத்தியின்றி செயற்பட்டு வருகின்றது.

இந்த விடயத்தினை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் அமர்ந்திருந்த தருணமொன்றிலேயே ஆதங்கத்துடன் வெளியிட்டிருந்தார். அத்தோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், தமிழ் மக்களுக்கும் இடையிலான விரிசலை ஏற்படுத்துவதற்கான முனைப்புக்களின் போக்கில் இவ்வாறான விடயங்களை அரசாங்கம் முன்னெடுக்கின்றதா?, என்கிற கேள்வியையும் எழுப்பியிருந்தார்.

தேர்தல்- வாக்கு- வாக்குறுதி அரசியல் என்பது உண்மை பொய்களுக்கு இடையிலானதுதான். ஆனாலும், மக்கள் மன்றமொன்றில் எழுப்பப்படும் நியாயமான கேள்விகள் தொடர்பில் அக்கறைகொள்ள வேண்டியது அவசியம். அதுவும், காலம் காலமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சார்பில் எழுப்பப்படும் போது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். ஆனால், அரசாங்கம் அதிக தருணங்களில் தட்டிக்கழித்தே வந்திருக்கின்றது.

இன்னொரு பக்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இடையிலான முரண்பாடுகளை அதிகரிப்பது தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆர்வத்தோடு செயலாற்றுகின்றார் என்பது மாதிரியான கருத்தொன்றை மட்டக்களப்பில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இரா. சம்பந்தன் தெரிவித்திருந்தார். குறிப்பாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்- எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கிடையிலான முரண்பாடுகள் மற்றும் அதன்போக்கிலான நிகழ்வுகள் தொடர்பில் குறிப்பிடும் போதே அவர், ரணில் விக்ரமசிங்கவின் பிரித்தாளும் தந்திரம் தொடர்பிலான விடயத்தை முன்வைத்தார்.

வடக்கு- கிழக்கில் தமிழ் மக்களின் அரசியல் அங்கிகாரம் பெற்ற ஏக தரப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது என்ற நிலையை மாற்ற வேண்டும் என்கிற நிலைப்பாடுகள் இரண்டு மூன்று தரப்புக்களுக்கு உண்டு. அதில், நியாயமான காரணங்களும் உண்டு. ஆனால், தென்னிலங்கை அரசாங்கத்துக்கு இருக்கின்ற காரணம் பிரித்தாளுதலும், அதனூடாக குரங்கு அப்பம் பிரித்த கதையாக்கி இன முரண்பாடுகளுக்கான தீர்வு விடயத்தை கையாளுதலும் ஆகும்.

விடுதலைப் புலிகள் எனும் பக்கத்தில் ஒருங்கிணைந்திருந்த தமிழ் மக்களை, புலிகளின் அகற்றத்துக்குப் பின்னாலும் பெரிதாக பிரித்தாள முடியவில்லை என்பதுவும், அதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் தோற்கடிக்கப்பட்டு வருகின்றன என்பதுவும் தென்னிலங்கையின் பெரும் ஆதங்கம். அது, மஹிந்த ராஜபக்ஷவாக இருந்தாலும், ரணில் விக்கிரமசிங்கவாக இருந்தாலும் நிலைப்பாடு ஒன்றுதான். அப்படிப்பட்ட நிலையில், ஏக அங்கிகாரம் பெற்ற தரப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிதைவினை தென்னிலங்கை வெகுவாக விரும்புகின்றது.

வடக்கு- கிழக்கில் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவிகளுக்கு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த நாட்களில் நியமித்திருக்கின்றார். நல்லிணக்க அரசாங்கம் தன்னுடைய கொள்கைகளின் போக்கில் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் வெற்றிபெற்ற கட்சிக்கே அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவி வழங்கப்படும் என்கிற நிலைப்பாட்டையும் வெளியிட்டிருந்தது. அதன்போக்கில், யாழ்ப்பாணம் (கிளிநொச்சி), வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இரா. சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் தலைவர்களும் அதனை எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், அந்தப் பதவிகள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு குறிப்பிட்டளவான ஏமாற்றத்தினை வழங்கியிருக்கின்றது. குறிப்பாக, அமைச்சரவை அமைச்சருக்குரிய அந்தஸ்துள்ள பதவி என்று கருதப்படும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவி தமக்கு கிடைக்கும் என்று காத்திருந்தவர்களின் நிலை ரொம்பவும் வருத்தமானது.

பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசாங்கத்தின் நேரடிப் பதவிகள் வழங்கப்படாதது தர்க்க ரீதியில் சரியானதுதான் என்கிற விடயமும் கவனத்தில் கொள்ளப்படக்கூடியது. அதாவது, இரா.சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டது எவ்வாறு தர்க்க ரீதியில் சரியானதோ அவ்வாறானதே என்பது.

ஆயுத மோதல்களினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு- கிழக்கில் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவிகளைப் பெற்றுக் கொள்வதனூடு குறிப்பிட்டளவான பணிகளைச் செய்யலாம் என்பது உண்மை. இன்னொரு பக்கத்தில், வடக்கு மாகாண சபையின் ஆட்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்று இரண்டு ஆண்டுகளாகின்றது. ஆனால், அதன் உள்ளக வேலைத்திட்டங்கள் தொடர்பில் எந்தவித நம்பிக்கைகளும் வெளிப்படுத்தப்படவில்லை. மஹிந்த ராஜபக்ஷ காலத்தின் பின்னரான கடந்த ஓராண்டிலும் கூட, வடக்கு மாகாண சபையினால் வேலைத்திட்டங்களின் போக்கில் முதிர்ச்சியான முனைப்புக்கள் மேற்கொள்ளப்படவில்லை என்கிற குற்றச்சாட்டுக்கள் உண்டு.

அதாவது, தீர்மானங்களை மேற்கொள்ளும் அவையாக மட்டுமே வடக்கு மாகாண சபை இருந்து வந்துள்ளது என்பதுவும், மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதியில், குறிப்பிட்டளவான நிதி பயன்படுத்தப்படாது மீண்டும் திறைசேரியில் சேர்க்கப்படும் சூழ்நிலையும் தொடர்கின்றது. இவ்வாறான, நிலை ஏன் ஏற்பட்டது என்பது தொடர்பில் கவனம் செலுத்துவது முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் கடமை.

மாகாணங்களுக்கான நிதி ஒதுக்கீட்டின் போது மத்திய அரசாங்கம் வடக்கு மாகாணத்தினை விசேடமாக கருதி ஒதுக்கீடுகளைச் செய்ய வேண்டும் என்று தொடர்ச்சியாக கோரும் சி.வி. விக்னேஸ்வரன் ஏன், ஒதுக்கப்பட்ட நிதியை வேலைத்திட்டங்களினூடு செலவழிக்க முடியவில்லை என்பதற்கான விளக்கங்களை முன்வைப்பதும் அவசியமானது.

மரத்திலிருந்து பறிக்கப்பட்ட முந்திரிப்பழமொன்று (மரமுந்திரிகை) எம்மிடம் வழங்கப்பட்டிருக்கின்றது என்று வைத்துக் கொள்ளலாம். அந்தப் பழத்தினை நாம் எப்படி பயன்படுத்தப் போகின்றோம். முதலில் முந்திரிப்பருப்பு உள்ள விதைப் பகுதியை நீக்கி, சாறுள்ள பழப்பகுதியை சாப்பிடுவோம். இன்னும் சிலர் முந்திரிப்பருப்பினை சாப்பிடும் நோக்கில் அதனைப் பெற்றுக் கொள்ள முனைவர்.

ஆனால், முந்திரப்பழத்தின் பழப்பகுதியையும், விதையிலுள்ள பருப்பு பகுதியையும் எவ்வாறு சரியாக பயன்படுத்துகின்றோம் என்பதில் தான் அதன் உண்மையான பயன்பாடு தங்கியுள்ளது. இரண்டையும் ஒரே தருணத்தில் பயன்படுத்துவது என்பது முடியாத காரியம்.

ஏனெனில், முந்திரிப்பருப்பினை பல கட்ட படிமுறைகளைத் தாண்டி பெற்றுக் கொள்ள வேண்டும். அவசரப்பட்டு கத்தியால் வெட்டினால் கைகளில் பால் பட்டு எரிச்சல் உண்டாகும். பச்சையான பருப்பும் உடலாரோக்கியத்துக்கு அவ்வளவு நல்லது அல்ல. சுவையும் அல்ல. அப்படியான நிலையொன்றையே தமிழ் மக்கள் இப்போது எதிர்கொண்டிருக்கின்றார்கள்.

அதாவது, முந்திரிப்பழத்தின் பழப்பகுதி எமது உள்ளக அபிவிருத்தி போன்றது. விதைக்குள்ளிருக்கும் பருப்பு (முந்திரிப்பருப்பு) இனமுரண்பாடுகளுக்கான தீர்வு போன்றது. நாம், இரண்டையும் பெற்றுக் கொள்வது தொடர்பில் அக்கறை கொள்ள வேண்டும்.

உள்ளக அபிவிருத்தி போதும் என்று நினைத்து தீர்வினை நிராகரிப்பதோ, தீர்வு போதும் என்று நினைத்து காலங்களைக் கடத்திக் கொண்டு உள்ளக அபிவிருத்தியை நிராகரிப்பதோ பிரச்சினைகளைத் தீர்க்காது. இரண்டும் சார்ந்த அரசியல் நிலைப்பாட்டின் போக்கில் நகர வேண்டியிருக்கின்றது. அந்த நிலைப்பாட்டினை இந்த அரசாங்கத்தோடு களமாடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்த் தரப்பு அடைய வேண்டியிருக்கின்றது. அதுதான், உண்மையான வெற்றியாக இருக்கும். மாறாக, வெறும் வார்த்தைகளுக்காக மாத்திரம் 2016ஆம் ஆண்டுக்குள் இனமுரண்பாடுகளுக்கான தீர்வினைப் பெற்றுக் கொண்டுவிடலாம் என்று இரா. சம்பந்தன் நம்பிக்கொண்டிருப்பது தோல்விகளில் போய் முடியும்.

குறிப்புக்கள்:

1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வடக்கு- கிழக்கில் 6 மாவட்டங்களில் (3 தேர்தல் மாவட்டங்கள்) மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவர் பதவிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது. இந்தக் கட்டுரை குறித்த அறிவிப்பு வெளிவருவதற்கு முன்னர் எழுதப்பட்டது.

2. மரமுந்திரிப்பழத்தில் (சாறுள்ள) பழப்பகுதி என்று நாம் வழமையாக அழைக்கும் பகுதியை நீண்டு வளர்ந்த சூலகப்பகுதி என்று விஞ்ஞானம் சொல்கின்றது. முந்திரிப்பருப்பினைச் சுற்றியுள்ள பகுதியே பழமென்கிறது. ஆனால், இந்தக் கட்டுரை நாம் வழமையாக முந்திரிப்பழம்- விதை- பருப்பு பற்றி புழக்கத்திலுள்ள உரையாடல் வடிவமே கையாளப்பட்டிருக்கின்றது என்று கொள்க.

(தமிழ்மிரர் பத்திரிகையில் (டிசம்பர் 016, 2015) வெளியான இந்தக் கட்டுரையை நன்றி அறிவித்தலோடு மீளப்பதிகின்றோம்: ஆசிரியர் குழு, 4TamilMedia)

 

SHARE