மாற்றத்தின் திறவு கோலாக தமிழ் மக்கள் பேரவை..!
வறட்டு கௌரவங்களை விடுத்து தலமைகள் ஒன்றிணைய வேண்டும்!
தமிழர் தலைவிதியை தீர்மானிக்கப்போகின்ற தத்தெடுப்பை தமிழ் மக்கள் பேரவை இன்று கையில் எடுத்திருக்கின்றது.
வரவேற்கத்தக்கதான இச்செயலை ஊக்கப்படுத்தி அதனை பலப்படுத்துவதற்கான ஆலோசனைகளை முன்மொழிவுகளாக தமிழ் மக்கள் பேரவைக்கு வழங்க வேண்டியது தமிழ் மக்கள் ஒவ்வொருவரினதும் தலையாகிய கடமையுமாகும்.
இதில் எவரும் அவருக்கு அழைப்பு விடுத்தார்கள் எனக்கு விடுக்கவில்வை என்பதாக ஒதுங்கி நிற்கக்கூடாது.
இந்த தமிழ் மக்கள் பேரவையினை உருவாக்குவதற்கும் அதன் சாதக பாதக தன்மைகள் தொடர்பில் சிந்திப்பதற்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர்தான் தமது மண்டையை போட்டு குடைந்திருக்கின்றார்கள்.
இந்நிலையில் இதை வெறுமனே அரசியல் சார்புடையவர்கள்தான் தோற்றுவித்திருக்கின்றார்கள் என்கின்ற புறநடையான ஊடகப்பரப்புரைகள் உண்மை நிலைக்கு அப்பால்பட்டது.
இந்த அமைப்பில் அரசியலுக்கு அப்பால் இயங்கு நிலையில் உள்ள ஏனையத்துறைகள்தான் பெரும்பாண்மையாக இருக்கின்றன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறானதொரு நிலையில் புறத்தே இருந்து வெட்டித்தனமான விமர்சனங்களையும் ஊடக அறிக்கைகளையும், ஊடக மாநாடுகளையும் நடாத்துவதை விடுத்து இந்த புதிய சிந்தனைக்கு எந்த வகையில் ஆதரவு வழங்கலாம், வலுச்சேர்க்கலாம் என்பது தொடர்பில் சிந்திக்க முயற்சிக்க வேண்டும்.
அதற்கு முடியாது என்றால் எங்கேயாவது ஒரு மூலையில் போய் ஒதுங்கி நிற்பது அதைவிட மேலானதாகவும் இருக்கும்.
கட்டப்பட்ட மணியினை எவரும் தொங்கித் தொங்கி இழுத்து அடிக்கலாம், ஆனால் அந்த மணியினை கட்டுவதற்கு முதலில் முயற்சி எடுத்திருக்க வேண்டும்.
எந்தவொரு அரசாங்கமும் முன்னெடுக்க உத்தேசித்திருக்காத விடயமான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியை தற்போதைய புதிய அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது.
இதில் தமிழ் மக்களின் அபிலாசைகள், கருத்துக்கள், அரசியல் உரிமைகள் உள்ளடக்கப்பட வேண்டிய தேவை அதிகமாகவே இருக்கின்றது.
இதனை இலக்காகக்கொண்டு செயல்திறன் மிக்கதான பணியினை முன்னெடுக்கும் முயற்சியினை இதுவரை காலத்தில் தமிழ் அரசியல் தலமைகள் முன்னெடுக்கத் தவறியதாகவே தெரிகின்றது.
அதிலும் குறிப்பாக தமிழ் மக்களின் தலைவிதியினை நாம்தான் தீர்மானிப்போம் எனும் சண்டித்தன பாணியிலான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எந்த முயற்சியையும் எடுத்திருப்பதாக தெரியவிலை.
இவ்வாறான நிலையினை ஊகித்ததாலோ என்னவோ தமிழ் மக்கள் பேரவையின் தோற்றம் என்பது காலத்தின் கட்டாயமாகவே மாறிவிட்டது எனலாம்.
தேசிய இனப்பிரச்சிணைக்கு சிறந்த தீர்வாக சமஷ்டி முறையே பலராலும் பிரஸ்தாபிக்கப்படுகின்றது. இது ஒருவகையில் நியாய பூர்வமானதாகவும் இருக்கலாம்.
ஏனெனில் இலங்கை என்பது பல்லின, பல்தேசிய மற்றும் பல்வேறு கலாச்சார சூழலை கொண்டமை ஒரு காரணமாகும்.
ஒற்றையாட்சி என்பதன் கீழான நிர்வாக முறைமை அல்லது ஆட்சி முறை என்பது இன்றைய காலகட்டத்தில் பொருந்தாத ஒன்றாகவே இருக்கின்றது.
தமிழர் தேசிய பிரச்சினை என்பது சுமார் எழுபது வருடங்களை அண்மித்து வரும் நிலையில் அதற்கான நீதியானதும், நிலைத்து நிற்கக் கூடியதுமான தீர்வும் எட்டப்பட வேண்டிய தேவை காலத்தின் கட்டாயமாகவே பார்க்கப்படுகின்றது.
ஆளுக்காள் பழைய பஞ்ஞாங்கத்தை மாறி மாறி புரட்டுவதை விடுத்து பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு புள்ளியில் ஒத்திசைய வேண்டும்.
தமிழன் எந்த நேரத்திலும் ஒற்றுமைப் படமாட்டான் என்பதை நாம் மட்டுமல்ல சர்வதேசமும் நன்கு கற்றறிந்து, அனுபவப்பட்டு புரிந்து கொண்ட ஓர் விடையம்.
இவ்வாறான நிலையில் இந்த தேசிய இனப்பிரச்சினை எனும் கருப்பொருளை எத்தனை தலைமுறையினர்க்கு கடத்தப்போகின்றோம் என்பதுதான் எமக்கே தெரியாத அதேவேளை எம்முன் இருக்கும் ஒரு கேள்வியாகும்.
ஏதோ ஒரு இடத்தில் தொடக்கப்;புள்ளி வைக்க வேண்டும். அதனை யார், எதால், எப்படி, எங்கு..? வைப்பது என்பது முக்கியமல்ல.
மாறாக ஒன்றுபட்ட, ஐக்கியப்பட்ட கூட்டு நடவடிக்கைகளே அதற்கு இன்றியமையாததாகும் என்பதே கடந்த காலத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாகும்.
அதற்கு யார் யார் எல்லாம் தமிழர் தலைவிதியை நாம்தான் தீர்மானிப்போம் என புறப்பட்டார்களோ அவர்கள் அத்தனை பேரும் ஓரிடத்தில் சங்கமிக்க வேண்டும்.
தங்களுக்குள் அடிபடுவதை முதலில் நிறுத்திக்கொண்டு ஒன்றாக சேர்வது பற்றி சிந்திக்க வேண்டும்.