இலத்திரனியல் வாகன அனுமதிப் பத்திரத்தினை இனி பிரதேச செயலகத்தில் பெறலாம்

591
வட மாகாண வாகன  வரி அனுமதிப்பத்திரங்களை மாகாணத்தின் எந்தப் பிரதேச செயலகத்திலும் பெறக்கூடியதான இலத்திரனியல் வருமான அனுமதிப் பத்திரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக வட மாகாண போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் பிரான்சிஸ் – ஜோன்சன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர்மேலும் தெரிவிக்கையில், வட மாகாண போக்குவரத்து திணைக்களமும் , வட மாகாண போக்குவரத்து அமைச்சும் இணைந்து வாகன வரி அனுமதிப்பத்திரங்களை மாகாணத்தின் எந்தப் பிரதேச செயலகத்திலும் பெறக்கூடியதான இலத்திரனியல் வருமான அனுமதிப் பத்திரம் பெறக்கூடியதான ஓர் நடைமுறையினை அமுல்ப்படுத்த எண்ணியுள்ளோம்.

இதன் மூலம் மாகாணத்தின் 34 பிரதேச செயலாளர் பிரிவின் எந்தப் பிரதேச செயலகத்தில் எனும் பதிவில் உள்ள வாகன உரிமையாளர்கள் தாம் வதியும் அல்லது தொழில் புரிகின்ற  பிரதேசத்திற்கு அண்மையில் உள்ள மாகாணத்தின் எல்லைப் பரப்பிற்கு உட்பட்ட எந்தவொரு பிரதேச செயலகத்திலும் வரி அனுமதிப்பத்திரத்தினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இவ் நடைமுறையானது எதிர்வரும் ஏப்பிரல் மாதத்தில் நடைமுறைக்கு வருவதற்கான முன் ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

இவ்வாறு அனைத்து பிரதேச செயலகங்களிலும் அனுமதிப் பத்திரத்தினைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறை அமுல் செய்யப்பட்டதும் இந்த ஆண்டின் இறுதியில் இருந்து மற்றுமோர் நடைமுறையை அமுல்படுத்தவும் முயற்சிக்கின்றோம்.

அதாவது தற்போது பிரதேச செயலகங்களில் பணத்தை மட்டுமே செலுத்த முடியும் இந்த ஆண்டின் இறுதிக்குள் இதற்குப் பதிலாக காசோலை மற்றும் முற்கொடுப்பணவு அட்டைமூலமான பணப்பரிமாற்றம் என்பனவும் நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களினால் பல வாகன உரிமையாளர்களின் நேர விரயம் மட்டுமன்றி பணச்செலவுகள் கூட மீதப்படுத்தக் கூடிய சந்தர்ப்பம் வட மாகாண வாகன உரிமையாளர்களிற்கு கிடைக்கும்.

SHARE