வானத்தால் போன சனியனை ஏணிவைத்து இறக்கிய சம்பந்தனும், சுமந்திரனும்

253

Wigneswaran-with-Sambanthan

த.தே.கூட்டமைப்பைப் பொறுத்தவரை இதுவரை காலமும் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாகவே செயற்பட்டு வந்தனர், வருகின்றனர். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாக அக்காலகட்டத்தில் இருந்தவர்கள் தம்மை மக்கள் நிராகரித்துவிட்டார்கள், நிராகரித்த எமக்கு தேசியப்பபட்டியலின் மூலம் கூட ஆசனம் எதுவும் கிடைக்கவில்லை போன்ற காரணங்களால் த.தே.கூட்டமைப்பிடம் தமிழ் மக்களின் தீர்வுக்கான திட்டங்கள் இல்லை எனக்கூறிக்கொண்டு அதற்கு மாற்றீடாக தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பினை கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் ஆரம்பித்துவைத்துள்ளனர். இதற்கு தகுந்த தலைவராக சிங்கள பேரினவாதத்துடன் இரண்டறக் கலந்தவரும், வாசுதேவ நாணயக்காரவின் சம்பந்தியுமான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இன்று செயற்படும் விதங்கள் அனைத்தும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பையும், தமிழரசுக்கட்சியையும் சிதறடிக்கும் ஒரு சதித்திட்டமே.

பாலியல் ரீதியான பிரச்சினைகளில் சிக்குண்டு சிறைவாசம் அனுபவித்து பின்னர் இறப்பினைச் சந்தித்த சுவாமியான பிரேமானந்தாவின் தீவிர பக்தனான முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள், இந்தச் சுவாமியினை விடுதலை செய்யக்கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மடல் எழுதியதையும் நாம் அனைவரும் அறிந்ததே. இவ்வாறான சுவாமி பக்தரை அரசியலுக்குள் கொண்டுவந்த சம்பந்தனையும், சுமந்திரனையும் என்ன செய்யவேண்டும் என்பது ஒருபுறமிருக்க, இவரை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் இணைத்து, வடக்கின் முதலமைச்சராக கொண்டுவரவேண்டாமென சம்பந்தன், சுமந்திரனைத் தவிர அப்போதைய உறுப்பினர்கள் எதிர்ப்பினை வெளியிட்டனர். இவருக்குப் பதிலாக மாவை சேனாதிராஜா அவர்களையே முதலமைச்சராக்குவது என்பதே எதிர்ப்புத் தெரிவித்தவர்களது திட்டமாக இருந்தது. இதில் மாவையாருக்கும் உடன்பாடில்லை. இறுதிநேர கழுத்தறுப்பாக த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் முடிவின் படி ஒரு நீதியரசர் என்கின்ற வகையில் உலகம் அவருக்கு தலைசாய்க்கும். அவர் நீதியாகச் செயற்படுவார் என்கின்ற காரணங்களால் அவரை அரசியலுக்குள் கொணர்ந்து முதலமைச்சர் வேட்பாளராக்கியதுடன் அவர் வெற்றியும் பெற்று தற்போது வடக்கின் முதலமைச்சராகத் திகழ்கின்றார்.

இன்று அதனுடைய விளைவுகள் பல்வேறு பரிணாமங்களைத் தோற்றுவித்துள்ளது. அதனொரு வடிவம்தான் தமிழ் மக்கள் பேரவை. தமிழ் மக்களின் நலன்சார்ந்த புத்திஜீவிகளை உள்ளடக்கிய கட்சி சார்பற்ற ஒரு நடுநிலைமை வகிக்கக்கூடிய பேரவை எனக்கூறப்பட்டாலும் இதன் பின்புலத்திலிருந்து செயற்படுபவர்களாக வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிற்றம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோரும் இணைந்து செயற்படுகின்றனர். இதிலுள்ள ஏனையோர் பற்றி அலட்டிக்கொள்ளத்தேவையில்லை. இருப்பினும் முதலமைச்சர் விக்னேஸ்வரனும், மூத்த உறுப்பினர் சிற்றம்பலம் அவர்களும் இவ்வமைப்பில் இணைந்துகொண்டுள்ளமை தான் மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினால் அரசியலுக்குள் உள்வாங்கப்பட்டு முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுடன் தற்போது முதலமைச்சர் என்கின்ற பதவியில் இருக்கும் விக்னேஸ்வரன் அவர்கள் அக்கட்சிக்குத் தெரியாமல் தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து செயற்படுவது என்பது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாததொன்று. நியாயபூர்வமான விடயங்களைக்காட்டுவதன் மூலம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அங்கத்தவர்களுக்கும், தமிழரசுக்கட்சிக்கும் இடையில் குழப்பங்களைத் தோற்றுவிக்க முற்படும் ஒரு செயற்பாடாகவே வடக்கு முதல்வரின் செயற்பாடுகள் அமையப்பெற்றுள்ளது.
த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் முதல்வருடன் முரண்பட்டபோதிலும் அவரை விடாப்பிடியாக அரசியலுக்குள் அழைத்துவந்த சம்பந்தனும், சுமந்திரனும் தான் இதற்கு பதில் வழங்கவேண்டும். முதலமைச்சர் பதவியினை ஏற்றுக்கொண்ட ஒரு சில மாதங்களின் பின்னர் தான் சிங்கள பேரினவாதத்துடன் இணைந்தவர் என்கின்ற குணத்தை வெளிக்காட்ட ஆரம்பித்தார். வெளியே கடவுள் உள்ளே மிருகம் என்கின்ற தோரணையில் தான் அவரது செயற்பாடுகள் அனைத்தும் அமைந்துள்ளது. ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் அவருக்கு கிடைத்ததன் மூலம் அவர் ஒரு சிறந்தவர் என ஏனையோர் கூறுகின்றார்கள். கூட்டமைப்பிலிருந்து இவர் தனித்து செயற்பட்டிருந்தால் வாக்குகள் மிகக்குறைவாகவே பெற்றிருப்பார்.

30 வருடங்களாகப் போராடியவர்கள் அருகிலிருக்க நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் ரீதியில் முதல்வரின் செயற்பாடுகள் அமைந்துள்ளது. இவரை வானத்தால் போன சனியன் எனக்கூறுவதற்கும் காரணம் உண்டு. ஊடகங்களுக்கு இவர் தனது அரசியல் உட்பிரவேசம் பற்றி கூறும்போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர்தான் என்னை இந்த ஆசனத்தில் அமர்த்தினார்கள். எனக்கு அரசியல் பற்றித்தெரியாது. அரசியலுக்கு வந்த பின்னர்தான் இவ்வளவு பிரச்சினைகள் குறித்து தெரிந்துகொண்டேன். அதன் பின் எனக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை நான் நேர்த்தியாக செய்யவேண்டும். அதேபோல் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினருக்கு பதில் வழங்க முடியாது. மக்களுக்கு நாம் உண்மையாக இருக்கவேண்டும் என தனது கருத்தில் வலியுறுத்தியுள்ளார். இவ்விடயத்தினை ஏற்றுக்கொண்டாலும் ஒரு கட்சியின் தலைமைத்துவதற்குத் தெரியப்படுத்தாமல் செயற்படுவது தவறான விடயம். அவ்வாறு பிடிக்கவில்லையெனில் விலகிச்செல்வதுதான் சிறந்ததொன்றாக அமையும். அதனைவிடுத்து கட்சிக்குள் முரண்பாடுகளுடன் செயற்படுவது தமிழ் மக்களைப் பாதிக்கின்ற விடயமாகவே அமையும். அரசியலில் இவரது செயற்பாட்டை வலுப்படுத்தியது இந்த த.தே.கூட்டமைப்பு. தற்போது பேரவையில் உள்ள அனைவரும் புத்திஜீவிகளோ அல்லது பல துறைசார்ந்தவர்களோ அல்ல. இவ்வாறான நிலையில் இவரை கடவுளாக மக்கள் பார்க்கின்றார்கள் என த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் கூறியிருப்பது பெரும் சர்ச்சையினையும் ஏற்படுத்தியிருக்கின்றது. அதேநேரம் 2013ஆம் ஆண்டு தமிழ்த்தேசியப்பேரவை என்ற ஒன்றினை உருவாக்க த.தே.கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சியின் தலைவர்களும் மன்னார் அமைதியகம் வளாகத்தில் சந்தித்து தீர்மானங்களை மேற்கொள்ளவிருந்தார்கள். இதனை குழப்பும்நோக்கில் செயற்பட்டவர்கள் சம்பந்தன், சுமந்திரன்;, செல்வம் அடைக்கலநாதன் போன்றோரே. எமக்கான தீர்வுகள் வரையப்படவும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பதிவு செய்யப்படவேண்டும் என்ற நிபந்தனைகளும் இங்கு பேசப்படவிருந்தன. அன்று இந்தப்பேரவை உருவாக்கப்பட்டிருந்தால் இன்று முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தலைமையில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை உருவாகுவதற்கான அவசியம் ஏற்பட்டிருக்காது.
தந்தை செல்வாவின் காலத்திலிருந்து இன்றைய தலைமுறைவரை தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டங்கள் வரைந்துகொடுக்கப்பட்ட வரலாறுகள் இருந்தாலும் அவையணைத்தும் கிழித்தெறியப்பட்ட சம்பவங்களே பதியப்பட்டிருக்கின்றன. இதனைவிட பலமாகச்செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகளால் எவ்விதமான பயனும் தமிழ் மக்களுக்குக் கிடைக்கவில்லை என்றே கூறவேண்டும். முன்வைக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டங்கள் அனைத்தும் கிழித்தெறியப்பட்டு அத்துமீறிய செயற்பாடுகளே வரலாறுகளில் இடம்பிடித்திருக்கின்றன.
தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களுக்கான தீர்வுகளை முன்வைத்து அதில் சாதனை படைக்கலாம் என எண்ணிக்கொண்டிருக்கின்றது. பூகோள அரசியல் மாற்றம் பெறும்வரை தமிழ் மக்களுக்கான தீர்வுகள் என்பது சாத்தியமல்ல. விடுதலைப்புலிகளாலும், த.தே.கூட்டமைப்பினாலும் முன்வைக்கப்பட்ட தீர்வுகள் அனைத்தும் சர்வதேச நாடுகளினால் எவ்வாறு சிதைக்கப்பட்டது என்பதை வரலாறுகள் எடுத்துக்காட்டுகின்றது. இந்தியா, சீனா, பாக்கிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகள் தமது அரசியலை நிறைவேற்றுவதற்காக தற்போதும் இலங்கையை பயன்படுத்தி வருகின்றது. பூகோள அரசியலை மாற்றுவதில் பல ஊடகவியலாளர்கள் செயற்பட்டனர். இதில் குறிப்பாக ஊடகவியலாளர் டி.சிவராம் அவர்களைக் குறிப்பிடலாம். தமிழ் மக்களிடையே ஒற்றுமையினை தோற்றுவிக்கும் வகையில் பிரிந்துசெயற்பட்ட புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ போன்ற கட்சிகளை ஒருங்கிணைத்து, சர்வதேச ரீதியாக பேச்சுக்களை நடாத்த தேசியத்தலைவர் பிரபாகரனுடன் கலந்தாலோசித்து, இந்தக் கூட்டமைப்பினை உருவாக்கினார். இதன்போது பிரிந்துநின்ற அனைத்து தமிழ் இயக்கங்களும் ஒன்றுசேர்ந்தன. இதன் ஊடாக பூகோள அரசியலில் இருந்து விடுபட்டு, அடக்கியாள நினைக்கும் மேற்கத்தேய நாடுகளுக்கெதிரான செயற்பாடுகளாக தமது இனத்தினை முன்கொண்டுவருவதுதான் சிவராம் மற்றும் தேசியத்தலைவரின் திட்டமாகவிருந்தது. இதனை ஏற்றுக்கொள்ள இயலாத இனவாத கட்சிகளும், மேற்கத்தேய நாடுகளும் தமிழ் மக்களது போராட்டத்தினை சிதைவடையச்செய்து தமது சுயநல அரசியலை எம்மீது திணித்துக்கொண்டுள்ளது. மீண்டும் தமிழினம் சர்வதேச, உள்நாட்டு அரசியலினாலும் ஏமாற்றப்படும் நிலைமையே தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு படிப்படியாக எதிர்க்கட்சிப்பதவியினை கைப்பற்றி பூகோள அரசியலை மாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் இதனை சீர்குலைப்பதற்ககாவே இந்த தமிழ் மக்கள் பேரவை வடமாகாணசபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழீழப்போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர் வரிசையில் கருணாவிற்கு அடுத்தநிலையில் முதல்வர் அவர்களும் இடம்பிடிக்கும் நோக்கில் தனது இனம் எவ்வாறுபோனாலும் சரி என்ற தோரணையிலும், சர்வதேச அரசியலுக்கேற்ப அவரது செயற்பாடுகள் அமையப்பொற்றுள்ளது. பாலியல் ரீதியாக பல பிரச்சினைகளில் சிக்குண்ட சுவாமி எனப்படும் பிரேமானந்தா அவருடன் தொடர்புகளைப்பேணிவந்த விக்னேஸ்வரனின் தனிப்பட்ட வாழ்வினை எடுத்துக்கொண்டால் அதில் ஏராளமான தீமையான விடயங்கள் மறைந்துள்ளன. இவ்வாறானவர் தான் இவர் எனத்தெரிந்திருந்தும் இவரை அரசியலுக்குள் கொண்டுவந்த த.தே.கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு என்னசெய்யவேண்டும்? இதேவேளை தமழ் மக்களுக்கான தீர்வுகள் எட்டப்படும்போது எட்டப்பர் போல செயற்படும் விதங்கள் தமிழ் மக்களுக்கு மனவேதனையினை ஏற்படுத்தியுள்ளது.

 

இரணியன்

SHARE