புதிய ஆட்சி ஏற்பட்டு ஓராண்டு பூர்த்தியாகின்ற நிலையில் பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியிலேயே பசில் ராஜபக்ச இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஓராண்டுக்கு முன்னர் புதிய ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்த ஜனாதிபதி தேர்தலின் தோல்விக்குப் பின்னர் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றிருந்தவர், பின்னர் இலங்கை வந்திருந்த போது, அவர் மீது நிதி மோசடிக் குற்றச்சாட்டில் விசாரணைகள் பாய்ந்தன.
கடந்த ஏப்ரலில் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்ட பசில் ராஜபக்ச, பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில் திவிநெகும என்ற வறுமை ஒழிப்புத் திட்டத்தில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பெரும் முறைகேடுகள் தொடர்பில் அவர் மீது விசாரணைகள் நடக்கின்றன.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை கவிழ்க்க இந்தியா, அமெரிக்கா போன்ற பலம்கொண்ட நாடுகள் முக்கிய பங்களிப்பு செய்துள்ளதாக பசில் ராஜபக்ச குற்றம்சாட்டினார்.
‘குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பல என்று எமக்கு எதிராக அணிதிரண்டிருந்தன.
சர்வதேச மட்டத்தில் அந்த நாடுகள் கொடுத்த அழுத்தங்களுக்கு அப்பால் உள்நாட்டிலும் அழுத்தம் கொடுத்தன’ என்றார் பசில் ராஜபக்ச.
அந்த நாடுகள் பகிரங்கமாக இதனைச் சொல்லியிருக்கின்றன. அமெரிக்கா தங்களின் வருடார்ந்த அறிக்கையில் 2015-ல் தமக்கு கிடைத்த வெற்றி என்று இலங்கையின் ஆட்சி மாற்றத்தை வர்ணித்துள்ளது.
அதைவிட வேறு சாட்சி என்ன வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்த அவரது மூன்று சகோதரர்களில் ஒருவர் தான் பசில் ராஜபக்ச என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜபக்சவினரை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது – பசில் ராஜபக்ச
ஐக்கிய தேசியக் கட்சிக்கோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ ராஜபக்சவினரை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் ராஜபக்சவினரின் ஆட்சி வீழ்த்தப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளமை குறித்து ஊடகம் ஒன்று வழங்கிய செவ்வியில் பசில் ராஜபக்ச இதனை கூறியுள்ளார்.
மக்களுக்கு மாத்திரமே ராஜபக்சவினரை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியும்.
மகிந்த ராஜபக்ச என்பவர் போராடி முன்னேறி வந்த தலைவர். அவர் இரகசிய சதித்திட்டங்களை தீட்டி முன்னோக்கி வந்த தலைவரல்ல.
ராஜபக்ச ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் நாடு அடைந்துள்ள நிலைமை குறித்து கவலையடைகிறேன்.
ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சகல அபிவிருத்தி நடவடிக்கைகளும் ஸ்தம்பித்துள்ளன.
ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு வந்தது நல்லதா கொட்டதா என்பதை மக்கள் சிந்தித்து பார்ப்பார்கள்.
அன்று எப்படி இருந்தாலும் தற்போது சிந்தித்து பார்க்கும் போது எந்தளவுக்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு தானே பொறுப்பேற்க வேண்டும் என சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் மறுத்த பசில், அரசாங்கத்தின் சில குறைப்பாடுகளும் சில சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுமே தோல்விக்கு காரணம் எனக் கூறியுள்ளார்.
சரியானதே அல்லது தவறான காரணங்களின் அடிப்படையிலோ பலமிக்க நாடுகள் எம்முடன் கோபித்து கொண்டன. குறிப்பாக இந்திய, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பலமிக்க நாடுகள் எங்களை எதிர்த்தன.
சர்வதேசத்தில் கொடுக்கும் அழுத்தங்களுக்கு மேலதிகமாக உள்நாட்டில் அந்த நாடுகள் அழுத்தங்களை கொடுத்தன. ராஜபக்சவின் ஆட்சி வீழ்த்தப்பட்டதன் பின்னணியில் இந்தியாவும் அமெரிக்காவும் உள்ளன.
தேர்தலில் அவர்கள் அழுத்தம் கொடுத்தனர். அதனை இல்லை என்று கூறமுடியாது. அமெரிக்காவின் ஆண்டறிக்கையில் கூட இது தமது வெற்றியென கூறப்பட்டிருந்தது எனவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்ற சேர்ந்த சில அணிகள் தற்போதைய அரசியல் தொடர்பில் வெறுப்படைந்துள்ளன.
சகலரும் இணைந்து கொள்ளக் கூடிய புதிய அரசியல் நீரோட்டத்தின் தேவை தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனினும் இப்படியான அரசியல் சக்தியை கட்டியெழுப்பும் பின்னணில் ராஜபக்சவினர் இல்லை எனவும் அவ்வாறான எதிர்பார்ப்பு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், அப்படியான ஒரு புதிய அரசியல் சக்தி உருவெடுத்தால் அதற்கு தமது பங்களிப்பு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்சவினர் மீண்டும் இலங்கையில் ஆட்சிக்கு வர முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள பசில், அந்த முடிவை மக்களிடம் ஒப்படைப்பதாக கூறியுள்ளார்.