தமிழ் அரசியல்கைதிகள் பல இன்னல்களுக்கு மத்தியில் பல வருடகாலமாக சிறைச்சாலைகளில் இருக்கும் விடயம் எமக்கு நன்கு தெரியும். நாம் அங்கு நேரடியாகச் சென்று கைதிகளின் நிலைமைகள் தொடர்பில் பார்வையிட்டுள்ளோம். பல தடவைகள் அரசுடன் இவர்களின் விடுதலை தொடர்பில் பேசியுள்ளோம். இவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளின்போது விவாதிக்கவிருக்கின்றோம். எனினும் தமிழ் அரசியல்கைதிகள் தவறான முடிவுகளை எடுத்துவிடக்கூடாது. சிலர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும், அதன் அரசியல்வாதிகளும்; அரசியலில் ஆதாயம் தேடுவதற்காக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அக்கறையின்மையோடு செயற்படுகின்றார்கள் என்பதாகக்குறைகூறிக்கொண்டிருக்கின்றார்கள். நாம் நேரடியாக இது தொடர்பாக ஜனாதிபதியிடம் பேசியிருக்கின்றோம். எமது தலைவர் இரா.சம்பந்தன் அவர்களும் தைப்பொங்கலுக்கு முன்பதாக கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கையைத் தெரிவித்திருக்கும் அதேநேரம் மீண்டுமொருமுறை தமிழ் அரசியல்கைதிகள் ஏமாற்றப்பட்டால் அதன் விளைவு பாரதூரமாகவிருக்கும் என்பதையும் வலியுறுத்திக்கூறியுள்ளோம். இவ்விடயம் தொடர்பாக நாம் கவனங்கொண்டுள்ளதுடன் சட்ட ரீதியாக செய்யவேண்டிய வேலைகளைச்செய்து அவர்களை விடுதலை செய்வது தொடர்பான பரிசீலனைகளை மேற்கொண்டிருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.