வட மாகாண சுகாதார அமைச்சில் கடந்த வருடம் ஒதுக்கப்பட்ட நிதியில் தசம் ஆறு வீதமே செலவிடப்படாதுள்ளது என வட மாகாண சுகாதார, புனர்வாழ்வு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வட மாகாண சுகாதார அமைச்சின் நிதி செலவீனங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் முகமாக வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
2015 ஆம் ஆண்டுக்கான சுகாதார அமைச்சின் மொத்த ஒதுக்கீடு 640 மில்லியன் ரூபாவாக உள்ளது. அவற்றில் 636.1 மில்லியன் ரூபா முழுமையாக செலவிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 99.4 வீதமான மூலதன நிதிக்கான ஒதுக்கீடுகள் முற்றுமுழுதாக செலவிடப்பட்டுள்ளது. சி.பி.ஜி என்ற திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 8.7094 மில்லியன் ரூபாவில் 8.597 மில்லியன் ரூபா அதாவது 98.7 வீதம் எமது திட்டங்களுக்காக உபயோகிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுகாதார அபிவிருத்திக்கான மூலதன நன்கொடை நிதியில் 355 மில்லியன் ரூபாவில் 354.474 மில்லியன் ரூபா அதாவது 99.2 வீதம் செலவிடப்பட்டுள்ளது. அதேபோல் பி.எஸ்.டி.ஜி நிதியில் 278 மில்லியன் ரூபாவில் 273 மில்லியன் ரூபா அதாவது 98.6 மொத்தமாக செலவிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் மாகாணசபையின் அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி உரிய முறையில் செலவிடப்படவில்லை என்ற கருத்து பிழையானது.
2018 ஆம் ஆண்டுவரை எமது அமைச்சு எவ்வாறு இயங்க வேண்டும் என்பது தொடர்பாக மூலோபாய திட்டமொன்றை நாம் தயாரித்துள்ளோம். அதனடிப்படையில் மூலோபாய செயற்பாட்டு காலம் 1.1.2016 இல் ஆரம்பமாகின்றது. அந்த மூலோபாயத்தில் குறிக்கப்பட்ட முக்கிய 5 இலக்குகளின் அடிப்படையில் எமது முதலாவது ஆண்டுக்குரிய திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இந்த வருடம் இலவச நோயாளர் காவு வண்டி சேவையை வட மாகாணத்தில் ஆரம்பித்துள்ளோம். இது அரசாங்க சேவையில் முதன் முதலாக எமது மாகாணத்தில் இது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரதான சேவை மையமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் உள்ள அலுவலகம் செயற்படும். இவற்றில் 100 நோயாளர் காவு வண்டி இணைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எமது மாகாணத்தில் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளது. எனவே வீதி விபத்துக்கள் ஏற்பட்ட இடத்தில் இருந்து அவசரமாக நோயாளர்களை எடுத்துச்செல்லவும் இச் சேவை பயனுள்ளதாக அமையும். எனவே மக்கள் மேலும் ஒத்துழைப்பு வழங்குவார்களாயின் எதிர்காலத்தில் இச் சேவையை மேலும் விஸ்தரிப்பதற்கு நாம் எண்ணியுள்ளோம்.
அத்துடன் எமது மாகாணத்தில் சித்தமருத்துவத்தை மேம்படுத்தும் நோக்கோடு சித்த மருத்துவத்தில் தலைநகராக இருக்கும் கிளிநொச்சியை பிரகடனம் செய்துள்ளோம். அதனடிப்படையில் கிளிநொச்சி கல்மடு நகரில் சித்த மருத்துவத்துறைக்கு தேவையான கட்டுமானங்களை செய்துவருகின்றோம். அதற்காக 75 ஏக்கர் நிலத்தில் மூலிகைத்தோட்டத்தையும் மேற்கொண்டு வருகின்றோம்.
எமது அமைச்சில் எமது சேவைகளை மேலும் வினைத்திறனாக வழங்குவதற்கு எமக்கு உள்ள பாரிய சவால் ஆளணி பற்றாக்குறை. தற்போது எமக்கு தேவையான ஆளணியில் 68 வீதமான ஆளணியை வைத்தே செயற்பட்டு வருகின்றோம். இது தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சருடன் பல பேச்சுவார்த்தைகளை செய்துள்ளோம். அதனடிப்படையில் இக் குறைகளை நீக்க தன்னாலான முயற்சியை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஆகவே ஆளணி பற்றாக்குறை நீங்கும் பட்சத்தில் மேலும் வினைத்திறனாக நாம் செயற்படுவோம்.
ஜனாதிபதியுடன் கொழும்பில் இடம்பெற்ற கூட்டத்தில் நாம் மூன்று முக்கிய விடங்களை எட்டியிருந்தோம். அதாவது வட மாகாணத்தில் இடம்பெறும் எந்தவொரு மீள்குடியேற்ற நடவடிக்கையிலும் மாகாண புனர்வாழ்வு மீள்குடியேற்ற திணைக்களத்தின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற முடிவு எட்டப்பட்டது. அதேவேளை மத்திய அரசின் அலுவலர்களும் மாகாண அரசின் அலுவலர்களும் இணைந்து மக்களின் சேவைக்காக உழைக்கவேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.
அத்துடன் எமது மாகாணத்தில் மீள்குடியேற்றத்தை செய்வதற்கு என மீள்குடியேற்ற கொள்கை இதுவரை இல்லை. எனவே நாம் இது தொடர்பாக உரையாடி நிபுணர்களின் உதவியுடன் எமது வட மாகாணத்திற்கான மீள்குடியேற்ற கொள்கையொன்றi தயாரித்துவருகின்றோம். மிக வரைவில் இக்கொள்கை எமது மாகாணத்திற்குரியதாக வரும்.
இதேவேளை பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள் சுமார் 45,000 இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. எனவே நாம் 5 மாவட்டங்களிலும் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.