பலவீனமடைந்து செல்லும் இலங்கை நாணயத்தைத் தூக்கி நிறுத்துவதற்கு, பெயரிடப்படாத முதலீட்டாளரொருவர் சம்மதித்துள்ளார். ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கையில் வைப்பிலிட்டே, இந்த உதவியை வழங்க அவர் முன்வந்துள்ளதாக, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
வழக்கத்துக்கு மாறான இந்த முயற்சி, இலங்கையின் நிதியியல் நிலைமைகளின் நிலையற்ற தன்மைகளை வெளிக்காட்டுவதாக, ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்விடயம் தொடர்பாக, றொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்குக் கருத்துத் தெரிவித்த நிதியமைச்சர், முதலீட்டாளரின் அடையாளத்தை வெளியிட மறுத்துவிட்டார். ஆனால், குறித்த அந்த முதலீட்டாளர், பெல்ஜியத்தைச் சேர்ந்தவரெனவும், இலங்கையிலுள்ள வணிகப் பங்காளரொருவருடன் இணைந்து செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
அவர் சம்மதித்துள்ள ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை, பிரஸெல்ஸிலும் லக்ஸம்பேர்க்கிலுமுள்ள வங்கிகளிலிருந்து, சமமான இரண்டு பங்குளாக வைப்பிலிடவுள்ளார். இந்த வைப்புக்கு, 2 சதவீத வட்டி வீதம் வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்படுகிறது. ரூபாயைப் பாதுகாப்பதற்காக, 3 தொடக்கம் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களைச் சேகரிக்கும் இலங்கையின் திட்டத்தின் ஓர் அங்கமாகவே இந்நடவடிக்கையும் இடம்பெறுகின்றது.
‘பிணைமுறி மற்றும் ஏனைய வகையான நிதிச் சேகரிப்பு வழிகளை விட, இது இடம்பெறுவதை நாம் அனுமதிக்கிறோம். ஐரோப்பாவிலுள்ள மறையான திரும்புகையை விட இது சிறந்தது’ என அமைச்சர் குறிப்பிட்டார். அவ்வளவு அதிகமான பணத்தை, தனிநபர் ஒருவரிடமிருந்து கொண்டுவருவது, ஆபத்துகளையும் கொண்டிருப்பதாக, நிதியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அமைச்சர் ரவி கருணாநாயக்க, வெளிநாட்டவர்கள் இலங்கையில், டொலரைப் பயன்படுத்தி பணம் செலுத்துவதை இலகுவாக்கியுள்ளார். ‘பணச்சலவை செய்யப்படுவதற்கான வாய்ப்புகளை இது ஏற்படுத்துகிறது. இதனூடாகக் கறுப்புப் பணம், இலகுவாக வர முடியும்’ என, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியரான ஸ்ரீமால் அபேரத்ன தெரிவித்தார். அத்தோடு, பணம் விரைவில் வெளியே செல்வதற்கான வாய்ப்பையும் இது ஏற்படுத்துவதாகவும், இதனால் நிலையற்ற நிலையை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.