பிஸ்ரலைக் காட்டி சுடுவன் என மிரட்டிய நெடுங்கேணி வன இலாகா அதிகாரி

302
வவுனியா, கனகராயன்குளம் குளம் பகுதியில் தமது வயிற்றுப் பிழைப்புக்காக விறகு வெட்டியர்கள் மீது பிஸ்ரல் துப்பாக்கியை காட்டி சுடப்போவதாக மிரட்டி நெடுங்கேணி வனஇலாகா அதிகாரிகள் கடுமையாக தாக்கியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை கனகராயன்குளம், மன்னகுளம் காட்டுப்பகுதியில் வாழ்க்கைச் சீவியத்திற்காகவும், பிள்ளைகளை படிக்க வைப்பதற்காகவும் விறகு வெட்டச் சென்ற பெண்கள் மற்றும்,

அப்பகுதியில் உள்ள ஆண்கள் மீது அங்கு வந்த நெடுங்கேணி வன இலாகா அதிகாரிகள் அவர்களது விறகு கட்டையைப் பறித்து அவர்களை கடுமையாக தாக்கிவிட்டு பிஸ்ரலைக் காட்டி சுடுவேன் எனவும் மரத்துடன் கட்டி வைத்து கொழுத்துவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த பெண்கள் அச்சம் காரணமாக வைத்தியசாலைக்குக் கூட செல்லாது வீட்டிலேயே இருக்கிறார்கள்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தெரிவிக்கையில், நாங்கள் யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள். மீள்குடியேற்றம் செய்யப்பட்ட காலப்பகுதியில் இருந்து இன்றுவரை எந்த தொழிலும் இல்லாததால் விறகு வெட்டி தான் சீவியத்தைப் போக்குகிறேன்.

என்னுடைய பிள்ளைகளை அதில் வரும் வருமானத்தை வைத்தே பார்க்கிறேன். அன்றைக்கு விறகு வெட்ட காட்டுக்கு போனபோது அங்கு வாகனத்தில் வனஇலாகா அதிகாரிகள் 6 பேர் வந்தாங்கள்.

நாங்கள் விறகு வெட்டும் போது எம்மை அடித்தார்கள். அது உங்கட அம்மாட காடா, அம்மாட புருசன்ட காடா, உங்களை கட்டிப்போட்டு நெருப்பு வைப்போம்.

இதை எங்கு போய் சொன்னாலும் உங்களை கட்டிப்போட்டு கொல்லுவோம் என மிரட்டினார்கள்.

நாம் கெஞ்ச கெஞ்ச அடித்தார்கள். நீதிமன்றில் ஒப்படையுங்கோ. நாம் அங்கு சொல்கிறோம் என்றேன். அதையும் பொருட்படுத்தாமல் அடித்தார்கள்.

பயத்தில் நாம் எங்கும் போகல. சாப்பாட்டுக்கு கூட நாம் கஸ்ரப்படுகிறோம். எங்கள் வீட்டை வந்து பாருங்கள். எனது உடம்பு முழுவதும் அவர்கள் அடித்து காயம் என கூறுகின்றார்.

SHARE