மருத்துவபீட மாணவர்கள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

297
நாடளாவிய ரீதியிலான மருத்துவபீட மாணவர்கள் கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பு பல்கலைகழக, மருத்துவபீடத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார்  2000ற்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.

நாட்டில் தனியார் பல்கலைகழகங்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை மூட வேண்டும் எனவும், அந்த கல்லூரிக்கு சலுகைகள் எதுவும் வழங்க கூடாது எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு, தனியார் மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்குவதானது அரச பல்கலைகழக மாணவர்களுக்கு பாரிய பாதிப்பாக அமையும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன், அரசாங்கம் கல்வி மற்றும் சுகாதார துறையினை விற்பனை செய்வதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த செயற்பாடு காரணமாக வைத்திய சேவையில் பொது மக்கள் கொண்டுள்ள நன்மதிப்பு இல்லாமல் செய்யப்படுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை கொழும்பு பல்கலைகழக, மருத்துவபீடத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையம் வரை சென்று மீண்டும் சுகாதார அமைச்சு நோக்கி செல்லவுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

SHARE