தாஜுடீனின் தொலைபேசி கலந்துரையாடல் இரகசிய பொலிஸாரிடம்

315
பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுடீனின் கொலையுடன் தொடர்புடைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், இதனுடன் சம்பந்தப்பட்ட முன்னாள் அரசாங்கத்தின் உயர்பீட நபர் ஒருவருக்கும் இடையே சம்பவ தினத்தன்று தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இந்த தொலைபேசி கலந்துரையாடலுக்கான ஆதாரங்கள் தங்களிடம் இல்லை என்று தெரிவித்திருந்த தொலைபேசி சேவை வழங்கும் தனியார் நிறுவனம், தற்போது அதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் விசாரணை நடத்தும் பிரிவினரிடம் ஒப்படைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இந்த ஆதாரங்களை இரகசிய பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வசீம் தாஜுடீன் கடந்த 2012ஆம் ஆண்டு கொழும்பு நாரஹேன்பிட்டியில் தீயில் கருகியிருந்த கார் ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இதுவொரு விபத்து என முன்னர் கூறப்பட்டிருந்த போதிலும், இது திட்டமிடப்பட்ட ஒரு கொலை என்று நீதிமன்றத்தில் தெரிவித்த இரகசிய பொலிஸார், அதற்கான பாதுகாப்பு கமெராக்களினால் பதிவாகிய காணொளி ஆதாரங்களையும் சமர்ப்பித்திருந்தனர்.

இந்த காணொளிகளை வெளிநாட்டிற்கு எடுத்துச்சென்று, ஆய்வு நடத்துவதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இந்த நிலையிலேயே தற்போது தொலைபேசி கலந்துரையாடல் ஆதாரங்களும் இரகசிய பொலிஸாரிடம் சிக்கியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரான யோசித்த ராஜபக்ச வசீம் தாஜுடீனின் படுகொலையுடன் தொடர்புபட்டிருப்பதாக குற்றச்சாட்டு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

B-yuDyCUIAAoUTT

SHARE