கிளிநொச்சி – பூநகரி கௌதாரிமுனை மற்றும் பரமன்கிராய் பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகள் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அவை தென்னிலங்கையில் உள்ள சிங்களவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
பொதுமக்களுக்கு சொந்தமான மற்றும் அரச காணிகளே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன் 875 ஏக்கர்களுக்கும் மேற்பட்ட காணிகளுக்கு சட்டவிரோத ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அவை விற்பனை செய்யப்பட்டுள்ளன.
குறித்த சட்டவிரோத ஆவணங்கள் யாழ்ப்பாணம், அநுராதபுரம் மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை தென்மராட்சியில் பணியாற்றிய இராணுவ அதிகாரி ஒருவர் பலகோடி ரூபா பெறுமதியில் பூநகரியில் காணிகளை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு காணிகளை வாங்கியவர் அப்பகுதியில் புதையல் பூசை என்ற பெயரில் பூசை நடத்தியதாகவும் இதன்போது கடந்த காலங்களில் வரணிப்பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டு புதைக்கப்பட்ட பெண்களது சடலங்கள் அப்புறப்படுத்தப்பட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.