சம்மந்தரின் சீற்றத்தால் பேயறைந்தவர் போலான சிற்றம்பலம்

346

 

 

tamilarasuஇன்று 22-01-2016 வவுனியாவில் இடம் பெற்ற தமிழ் அரசு கட்சி மத்தியகுழு கூட்டத்தில் தனது மௌனத்தை கலைத்த கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்மந்தன் பேராசிரியர் சிற்றம்பலம் அவர்களின் செயல்பற்றி தான் அடைந்த விசனத்தை வெளிப்படுத்தினார். சம்மந்தரின் சீற்றத்தால் பேயறைந்தவர் போலான சிற்றம்பலம் ஏற்க முடியாத காரணங்களை கூற முற்பட்ட போதும் அது சபையேறாததால், தான் தமிழ் அரசு கட்சி சார்பாக தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றார்.

வாழ்நாள் பேராசிரியர் வார்த்தை தடுமாறிய செயலானது அவர் கூட மேய்ப்பனை விலத்தி வழிமாறி திகைத்து “மே” “மே” என கத்தும் செம்மறி ஆட்டின் நிலை போலானது. ஏனெனில் தமிழ் மக்கள் பேரவை அங்குரார்பண கூட்டத்தில் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு, பேராசிரியர் தான் தமிழ் அரசு கட்சி சார்பாகவே கலந்து கொண்டதாக கூறினார். அடுத்து அவரிடம் கேட்கப்பட்ட இன்னொரு கேள்விக்கு அவர் பதில் கூறுமுன் முந்திக்கொண்ட சுரேஸ் கேள்வி கேட்டவர் மேல் சீறிப்பாய்ந்தார்.

இன்றைய கூட்டத்தில் சம்மந்தர் சீறியதும் பேராசிரியர் தப்பிப்பிழைக்க பொய்யுரைத்தார். ஏனெனில் ஏற்கனவே யாழ்ப்பாண தமிழ் அரசு கட்சி கிளை சிற்றம்பலம் அவர்களின் செயல் காரணமாக அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஏகமனாதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது என்ற செய்தி, ஏற்படுத்திய கலக்கம், சம்மந்தர் சீறிப்பாய்ந்ததும் பேராசிரியர் சிற்றம்பலத்தின் மனதில் பெரும் புயலை கிளப்ப பேயறைந்தவர் போலானார்.

பேராசிரியருக்கு அரசியல் பாடம் நடத்திய சம்பந்தர், நாங்கள் கூட்டமைப்பாய் செயல்படுகிறோம். மக்கள் எங்களுக்கு தான் அரசியல் தீர்வுக்கான ஆணையை தந்துள்ளனர். எப்படியான தீர்வை எம்மால் எட்டமுடியும் என்பதை எமது கடந்த பாராளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக கூறித்தான் மக்கள் ஆணையை பெற்றோம். அதன் பிரகாரம் செயல்பட்டு சாதகமான தீர்வை நோக்கிய நகர்வை நாம் முன் எடுக்கிறோம். நீங்கள் இந்த கூட்டமைப்பில் ஓர் அங்கம். அப்படி இருக்கும் போது எப்படி நீங்கள் இன்னொரு அரங்கில் ஏறலாம்?

வீட்டில் இருந்தபடி புதுமனை கட்டி, இருக்கும் வீட்டின் மீது எப்படி நீங்கள் கல்வீசலாம்? எனும் சாரப்பட சம்பந்தன் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் கூற பக்கத்தில் சுரேஸ் இல்லையே என கலங்கிய, பேராசிரியர், ராம பாணங்கள் போல் சம்பந்தர் தன் மீது பொழிந்த கேள்வி அம்புகளால், நிராயுதபாணியான ராவணன் போல் கலங்கி, இன்று போய் நாளை வா என ராமன் ராவணனிடம் கூறியது போல், தன்னிடம் சம்மந்தர் கூறுமுன் நான் தமிழ் அரசு கட்சி சார்பாக கலந்து கொள்ளவில்லை என, வெற்றிகரமாக பொய்யுரைத்து பின் வாங்கினார்.

இரண்டாம் உலகமகா யுத்தத்தின் போது ஜெர்மனிய படைகளின் தாக்குதலுக்கு தப்பி ஓடிய ஆங்கில படைகள் பற்றி, அப்போதைய பிரித்தானிய பிரதமரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, தனது சுருட்டை இழுத்து புகைவிட்டு விட்டு, சேர் வின்சன் சேர்ச்சில் கூறிய பிரபலமான பதில் “நாம் வெற்றிகரமாக பின்வாங்கி கொண்டிருக்கிறோம் “. சம்பந்தரின் நேரடி குற்றச்சாட்டை நியாயம் கூறி மறுக்க முடியாத வாழ்நாள் பேராசிரியர், பொய்யுரைத்து போனதேன் என்பது புரியவில்லை!. உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவோர் செயல் அரங்கேறும் காலம் இது என்பதா?tamilarasu_1tamilarasu

Readers Comments (0)

SHARE