குடும்பத்தின் வறுமை காரணமாக சவுதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாகச் சென்ற வவுனியா கோவில்புதுக்குளத்தைச் சேர்ந்த நேசராஜா கணேஸ்வரி என்ற 41 வயது குடும்பப் பெண் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
6 பிள்ளைகளின் தாயான இவர் குடும்பத்தின் வறுமை மற்றும் கணவனின் மருத்துவச் செலவுகளுக்காக கடந்த 03.08.2014 அன்று சவுதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.
அதன் பின்னர் 19.09.2014ம் திகதி கணவனுடன் தொலைபேசியில் உரையாடி இங்கு வேலை கஸ்டம் எனத் தெரிவித்துள்ளார். மேலும் சில வாரங்கள் கழித்து தற்போது இங்கு வேலை கஸ்டம் இல்லை எனத் தெரிவித்துள்ளார். மாதம் இருமுறை குடும்பத்தாருடன் தொலைபேசி மூலம் கதைத்து வந்துள்ளார்.
இறுதியாக இவர் 03.01.2016ம் திகதி குடும்பத்தாருடன் தொலைபேசியில் கதைத்துள்ளார். மேலும் 04.012.016 அன்று, ‘நான் பணிபுரியும் வீட்டார் இந்தியாவிற்கு செல்வதால் நானும் அவர்களுடன் இந்தியாவிற்கு செல்கின்றேன் தொலைபேசியில் கதைப்பதற்கு கஸ்டம்’ என குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.
அதைத் தொடர்ந்து 24.01.2016 அன்று அப்பெண் பணிபுரியும் வீட்டார் வவுனியாவில் உள்ள அப் பெண்ணின் கணவரிடம் தொலைபேசி மூலம் தொடர்பினை ஏற்படுத்தி உங்களின் மனைவி (நேசராஜா கணேஸ்வரி) வீட்டிலிருந்து தப்பித்துச் சென்றுவிட்டார், அவரைக் காணவில்லை என பொலிசாரிடம் முறைபாடு ஒன்றினையும் பதிவு செய்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் பொலிசார் இனந்தெரியாத சடலம் ஒன்று இருப்பதாக தெரிவித்துள்ளனர். அவ் இடத்திற்குச் சென்று பார்வையிட்ட போது அச்சடலம் நேசராஜா கணேஸ்வரி என அடையாளம் காட்டியுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளனர்.
இம் மரணத்தில் மர்மம் இருப்பதாக தான் சந்தேகிப்பதாக நேசராஜா கணேஸ்வரியின் கணவன் வவுனியா நெற் குழு அவரது வீட்டிற்குச் சென்று இவ் விடயம் தொடர்பாக கேட்டபோது தெரிவித்தார்.
மேலும் இறந்த நேசராஜா கணேஸ்வரியின் சடலம் இரண்டு மாதங்களின் பின்னரே இலங்கைக்கு கொண்டுவரப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவரது இறப்பால் இவரது 6 பிள்ளைகளும் கணவரும் செய்வதறியாது பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இவரது 6வது குழந்தைக்கு தற்போது 7வயது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லலும் இலங்கைப் பெண்கள் அங்கு பெரும் கொடுமைகளுக்கு ஆளாகின்றமையும் பல பெண்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு சடலங்களாகவே இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.