மலையக மக்களை இலக்கு வைக்கும் ‘சிறுநீரக வியாபாரக் கும்பல்கள்’

333

இலங்கையின் மலையகத்தில் வறுமையில் பிடியில் வாடும் தோட்டத் தொழிலாளர்களை குறிவைத்து சட்டவிரோத சிறுநீரக வியாபாரத்தில் சிலர் ஈடுபட்டுவருவதாக மலையகத்தைச் சேர்ந்த அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்களை இலக்குவைத்து இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்துவருவதை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஏற்கனவே உறுதிசெய்திருப்பதாகவும் கல்வி அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் பிபிசியிடம் கூறினார்.

இவ்வாறான சிறுநீரக வியாபாரத்தில் ‘தரகர்கள்’ ஈடுபட்டிருப்பதாகவும் அவர்களால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நேர்ந்துள்ள நிலைமை பற்றி வெளியில் கூற அச்சப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

‘ஹட்டனில் உள்ள தோட்டப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு பத்துலட்சம் ரூபா பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி, மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை செய்து சிறுநீரகத்தை பெற்றுவிட்டு’ சிலர் அவருக்கு பணம் கொடுக்காமல் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதாகவும் தகவல் உள்ளதாக அமைச்சர் இராதாகிருஷ்ணன் கூறினார்.

வறுமை காரணமாக அல்லது விழிப்புணர்வு குறைவாக உள்ளமை காரணமாக மலையக மக்களை குற்றக் கும்பல்கள் இலக்கு வைப்பதாக தான் கருதுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

குறிப்பாக, வெளிநாட்டைச் சேர்ந்தவர்களே இலங்கையில் பணம் கொடுத்து சிறுநீரகத்தை வாங்குவதாக தகவல்கள் உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

மலையக மக்கள் மத்தியில் இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி அமைச்சருமான இராதாகிருஷ்ணன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இலங்கையின் சில மருத்துவமனைகளில் சிறுநீரகங்களை விற்கும் சட்டவிரோதமான வியாபாரம் நடப்பதாகக் கூறி வெளியான புகார்களைத் தொடர்ந்து, வெளிநாட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைகளை செய்வதை இடைநிறுத்துமாறு அரசாங்கம் அண்மையில் மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே, சிறுநீரக மோசடிக்கு ஆளாக்கப்பட்டுள்ள மலையக பெருந்தோட்ட மக்கள் யாராவது இருப்பார்களாயின் அவர்கள் தங்களின் அத்தாட்சி பூர்வமான அனைத்து விபரங்களையும் தமக்கு தெரிவிக்குமாறு சௌமிய இளைஞர் நிதியத்தின் தலைவர் எஸ்.பி.அந்தோனிமுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
150811114122_kidney_removed_512x288_z_nocredit

151117154624_doctor_corruption_640x360_thinkstock_nocredit

SHARE