திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சம்பூர் – 07 ஆம் வட்டாரத்தில் கல்லொன்றுடன் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் வீசப்பட்ட சிறுவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் இன்று அதிகாலை 12.10 மணியளவில் மீட்கப்பட்டதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் சம்பூர் 07ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த குகதாஸ் தர்சன் வயது 06 என்பவராவர்
இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
குறித்த சிறுவன் தனது சகோதரனுடனும், பக்கத்து வீட்டிலுள்ள சிறுவனுடனும் நேற்று மாலை 4.00 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். இதன்போது மாலை நேரமாகவும் பக்கத்து வீட்டு சிறுவன் அவனது வீட்டுக்குச் சென்றுள்ளான். உயிரிழந்த சிறுவனின் சகோதரன் கடைக்குச் சென்றுள்ளான்.
சம்பவம் நடந்து சிறிது நேரத்தின் பின் உயிரிழந்த சிறுவனின் தாய் பிள்ளையை தேடியுள்ளார். மாலை 5.30 மணியாகியும் பிள்ளை இல்லாமையினால் சம்பூர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதன் பின் பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து சிறுவனை தேடிய போது சிறுவன் இறந்த நிலையில் கட்டப்படாத கிணறு ஒன்றுக்குள் கிடந்துள்ளான்.
இதனால் இந்தச் சிறுவன் கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான் என்றுதான் எல்லோரும் கருதியுள்ளனர். இதனையடுத்து இது சம்மந்தமாக தோப்பூர் ,மூதூர் பிரதேசங்களுக்கு பொறுப்பான திடிர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.ஏ.நூறுல்லாவிடம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் பின் திடிர் மரண விசாரணை அதிகாரி ஊர்மக்களுடன் உரையாடி விட்டு, இன்று செவ்வாய் கிழமை 12.10 மணிஅளவில் சுழி ஓடி ஒருவரை இறங்கி சடலத்தை வெளியில் கொண்டு வந்த போது சிறுவனின் வயிற்றில் கல் ஒன்று கட்டப்பட்டிருந்ததை கண்டு பேரதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் கொலை செய்யப்பட்டு வயிற்றில் கல் கட்டபட்டு கிணற்றுக்குள் வீசப்பட்டானா? அல்லது கல் கட்டப்பட்டு கிணற்றுக்குள் வீசப்பட்டானா என்கின்ற விடயம் பெரிதும் குளப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சிறுவனின் சடலம் நீதிவான் விசாரணைகளின் பின்னர் திருகோணமலை வைத்தியசாலைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.