25.01.2016 அன்று நடைபெற்ற மாவட்ட இணைக்குழு கூட்டத்தில் காணி தொடர்பான விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவருமான வைத்திய கலாநிதி சி.சிவமோகன் உரையாற்றினார். முக்கியமாக முற்றிலும் அபகரிக்கப்பட்ட கேப்பாபிலவு கிராமமக்களின் காணி, வட்டுவாகல் பிரதேசம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட காணி போன்ற விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து உரையாற்றினார். மேலும், மல்லாவி பொலிஸ் நிலையம் ஒரு தனியார் காணியில் அமைக்கப்பட்டது எனவும் அக் காணி மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது மாற்றுக் காணிகள் வழங்கப்பட வேண்டும் என தெரியப்படுத்தினார்.
கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் பிரதேச மக்களின் காணிகள் மகாவலி எல் வலயம் என்ற போர்வையில் அபகரிக்கப்படுவது தொடர்பாகவும் விலாவாரியாக தெரியப்படுத்தினார். தொடர்ந்து உரையாற்றிய அவர் பொது அமைப்புகளுக்கு சொந்தமான காணிகள் பல்வேறு இடங்களில் இராணுவத்தாலும் தனியாராலும் அபகரிக்கப்பட்டுள்ளது. எனவே அது பற்றிய விபரத்தினை அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலாளருக்கும் அரச திணைக்கள உத்தியோகத்தர்களையும் கேட்டுக்கொண்டார். கூட்டம் முடிவுற்ற பின் வெளியே தம்மை தமது சொந்த நிலத்தில் மீளகுடியேற்றம் செய்யுமாறு கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட கேப்பாபிலவு மக்களிடம் நேரடியாக கலந்துரையாடினார். (படங்களும் தகவலும் :- காந்தன்)