கார் ஒன்றைக் கொள்வனவு செய்யும் நோக்கில் கல்முனைப் பிரதேசத்திலிருந்து 30 இலட்சம் ரூபா பணத்துடன் வருகை தந்த இருவரை தாக்கி அவர்களிடமிருந்த பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் செல்ல முயன்ற மூவரில் இருவர் பொதுமக்களிடத்தில் வசமாக சிக்கிக் கொண்டனர்.
மற்றையவர் தலைமறைவாகியுள்ளார். இவர்களிடமிருந்து பணமும் மீட்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை இரவு இடம்பெற்ற மேற்படி சம்பவத்தில் சிக்கிய இருவரையும் நேற்று திங்கட்கிழமை கம்பளை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது சந்தேக நபர்களை பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவ தினமான கடந்த சனிக்கிழமை கல்முனையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் அவரது மைத்துனருடன் காரொன்றைக் கொள்வனவு செய்வதற்காக கண்டிக்கு வருகை தந்துள்ளார்.
இதன்போது கண்டியில் இருந்து வெளியேறிய இவர்களை பின் தொடர்ந்த மேற்படி சந்தேக நபர்கள் மூவர் கம்பளை வத்தேஹேண பிரதேசத்தில் வைத்து வர்த்தகர் சென்ற காரை மோதி நிறுத்தி இருவரையும் கடுமையாக தாக்கிவிட்டு 30 இலட்சம் ரூபா பணத்தையும் கொள்ளையடித்து தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் முச்சக்கர வண்டி சாரதிகள் சிலரும் பொது மக்களும் கொள்ளையர்கள் தப்பிச் செல்ல முயன்ற காரை மறைத்து சுற்றிவளைத்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இருவரை கைது செய்தபோதும் மூன்றாமவர் தப்பியோடியுள்ளார்.
மன்னார் மற்றும் உலப்பனை பிரதே சங்களைச் சேர்ந்த இருவரே கைது செய் யப்பட்டுள்ளனர் என கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.