கிங்தொட்டையில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு விரைவு ரயில்கள் –  ஆபத்து தவிர்ப்பு

276
காலி, கிங்தொட்டை ரயில் நிலையம் அருகே இன்று காலை நடைபெறவிருந்த பாரிய ரயில் விபத்தொன்று சாரதிகளின் திறமை காரணமாக மயிரிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது.

மாத்தறையிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த ரஜரட்டை ரெஜிண புகையிரதம் வந்து கொண்டிருந்த அதே ரயில் தண்டவாளத்தில் கண்டியிலிருந்து மாத்தறைக்கு சென்று கொண்டிருந்த ரயிலையும் செலுத்துமாறு சிக்னல் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் கண்டி-மாத்தறை ரயில் சில மீட்டர் தூரம் முன்னால் நகர்ந்திருந்த நிலையில் அதே தண்டவாளத்தின் எதிர்த்திசையில் ரஜரட்டை ரெஜிண ரயில் வருவதை புகையிரத கடவை காவலர் அவதானித்துள்ளார். உடனடியாக அவர் மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலை நிறுத்துமாறு அறிவிக்கும் வகையில் சிகப்புக் கொடியை அசைத்தவாறு தனது உயிரைப் பணயம் வைத்து தண்டவாளத்தில் முன்னோக்கி ஓடியுள்ளார்.

எனினும் வேகமெடுத்திருந்த ரயிலை ஒரேயடியாக நிறுத்துவதற்கு அதன் சாரதி கடுமையாக பிரயத்தனப்பட வேண்டி நேரிட்டுள்ளது.

பாரிய விபத்தை தடுப்பதற்கு சமயோசிதத்துடன் செயற்பட்ட ரஜரட்டை ரயிலின் சாரதி பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான போராட்டத்தின் கடைசியில் கடும் அழுத்தம் காரணமாக ஏற்பட்ட இரத்தக் கொதிப்பில் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை புகையிரதப் பயணிகள் முன்வந்து உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இரண்டு ரயில்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்களையும் செலுத்த சிக்னல் வழங்கப்பட்ட சம்பவம் புகையிரதத் திணைக்களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணைகளை மேற்கொள்ள உயர் அதிகாரிகள் குழுவொன்று காலிக்கு விரைந்துள்ளது. அத்துடன் சம்பவத்தின் போது அசிரத்தையாக செயற்பட்ட புகையிரத உதவி சாரதிகள் உள்ளிட்ட சிலர் உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

மறுபுறத்தில் கிங்தொட்டை ரயில் நிலையத்தின் அருகே உள்ள பியதிகம மேம்பாலத்தில் நின்றிருந்த பொதுமக்களின் கூச்சல் மற்றும் சைகைகள் கண்டு ஆபத்தொன்றை உணர்ந்து ரஜரட்டை ரெஜிண ரயிலின் சாரதி புகையிரதத்தை உடனடியாக நிறுத்தியதுடன், மாத்தறை ரயில் வருவதைக் கண்டு தனது ரயிலை பின்னோக்கி நகர்த்தியுள்ளார்.

இதன் காரணமாக பாரியதொரு ரயில் விபத்து மயிரிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது. மாத்தறை ரயிலின் சாரதி ரயிலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதனை நிறுத்தும்போது இரண்டு ரயில்களுக்கும் இடையில் ஓரிரு அடிகளே இடைவெளி இருந்துள்ளது.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக கொழும்பிலிருந்து காலி, மாத்தறை வரையான சகல புகையிரதங்களும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

welcome-page2_01

 

SHARE