வவுனியாவில் கடமை ஆற்றியபோது, சட்டம் நீதி நியாயத்தை நிலைநாட்டுவதற்காக இயன்றவரையில் செயற்பட்டேன்

308
வவுனியாவில் கடமை ஆற்றியபோது, சட்டம் நீதி நியாயத்தை நிலைநாட்டுவதற்காக இயன்றவரையில் செயற்பட்டேன்:

வவுனியாவில் கடமையாற்றியபோது, சட்டம் நீதி நியாயத்தை நிலைநாட்டுவதற்காக இயன்றவரையில் செயற்பட்டேன் – நீதிபதி இளஞ்செழியன் வவுனியா நிகழ்வில் உரை.

 யுத்த மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் வவுனியாவில் கடமையாற்றுவதென்பது இலகுவான காரியமல்ல. அப்படி இருந்தும் சட்டம், நீதி, நியாயத்தை நிலைநாட்டுவதற்காக என்னர் இயன்ற வரையில் கடமையாற்றினேன் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நுழைவாயில் திறப்புவிழா வைபவத்தில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 2002 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து, அந்தக் கல்லூரியின் முகப்பிற்குப் புதுப் பொலிவேற்படுத்தும் வகையில் மொத்தமாக 35 லட்சம் ரூபா செலவில் நிர்மாணித்துள்ள நேர்த்தியான நுழைவாயில் கட்டிட திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக நீதிபதி இளஞ்செழியன் கலந்து கொண்டிருந்தார். அவருடன் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மாவட்ட நீதிபதி ஏ.ஜே.அலெக்ஸ்ராஜா, கிளிநொச்சி மாவட்டத்தின் சிரேஸ்ட மாவட்ட நீதிபதி பிரபாகரன் ஆகியோரும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகண புஸ்பகுமார மற்றும் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா, கல்லூரியின் முன்னாள் அதிபர் பத்மநாதன் கலந்து கொண்டனர். கல்லூரி அதிபர் மரியநாயகம் தலைமையில் விழா நிகழ்வுகள் நடைபெற்றன. கல்லூரியின் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் கடமையில் உள்ள பிரிவுத் தலைவர்கள், ஆசிரியர்கள் ஆகியோருடன் மாணவர் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கட்டிடத்தின் பெயர்ப்பகுதியை கிளிநொச்சி மாவட்ட நீதிபதி திரை நீக்கம் செய்து வைக்க, பிரதான நுழைவாயிலை பிரதம விருந்தினர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் நாடாவெட்டி திறந்து வைத்ததுடன் பெயர்ப் படிகக் கல்லையும் திரைநீக்கம் செய்து வைத்தார். அதேவேளை, கல்லூரிக்கான பாதுகாப்பு கமரா கண்காணிப்பு வலையமைப்பை மன்னார் மாவட்ட நீதிபதி ஜே.அலெக்ஸ்ராஜா வைபவ ரீதியாக இயக்கி வைத்தார்.
இந்த நிகழ்வுகளில் பிரதம விருந்தினர் நீதிபதி இளஞ்செழியன் கல்லூரி சமூகத்தினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்;கப்பட்டதுடன், அவருக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. அதேநேரம் இந்தக் கல்லூரியின் பழைய மாணவர்களில் நீதிபதியாகப் பணியாற்றும் சிறப்பு பெற்ற கிளிநொச்சி மாவட்ட நீதிபதி பிரபகாரன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். அத்துடன்,இறுதி யுத்த காலத்;தில் வவுனியா மாவட்டத்தில் சிறந்த சேவையாற்றியமைக்காக மன்னார் மாவட்ட நீதிபதி ஜே.அலெக்ஸ்ரஜாவுக்கும் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்ப விருந்தினராகக் கலந்து கொண்டிருந்த வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகண புஸ்பகுமாரவுக்கு பிரதம விருந்தினர் பொன்னாடை போர்த்தி, நிகழ்வின் நினைவுச் சின்னத்தையும் வழங்கினார். அத்துடன், வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா மற்றும் கல்லூpயின் நுழைவாயில் கட்டிட நிர்மாணப் பணிகளை ஒருங்கிணைத்து, திறம்படச் செயற்பட்டமைக்காக 2002 ஆம் ஆண்டு மாணவர் பிரிவின் முக்கியஸ்தராகிய சண்முகராஜா சுஜேனும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
 
அங்கு உரையாற்றிய நீதிபதி இளஞ்செழியன் மேலும் தெரிவித்ததாவது: யுத்த மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் வவுனியாவில் கடயைமாற்றுவதென்பது இலகுவான காரியமல்ல. ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக மன்னார் உட்பட வன்னிப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அந்த சோதனைச்சாவடி ஊடாக வவுனியா நகருக்குள் வருவார்கள். அதேபோன்று அனுராதபுரம் பகுதியில் இருந்து வியாபார நோக்கத்திற்காகப் பெரும் எண்ணிக்கையானவர்கள் வருவார்கள். இதனால் வவுனியாவில் நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் போய் வந்து நடமாடினார்கள்.
அது மட்டுமல்ல. அந்த மக்கள் கூட்டத்திற்குள்ளே, பெரும் எண்ணிக்கையானவர்கள்; பிஸ்டலுடன் சுற்றுவார்கள். புலியினுடைய புலனாய்வு, புளொட், டெலோ, ஈரோஸ், ஈபிடிபி, ஈபிஆர்எல்எவ் என்று இருக்கின்ற எல்லா குழுவினரும் நடமாடினார்கள். அத்துடன் ரீஐடி, சிஐடி, ஆமி இன்டலிஜென்ட், நேவி இன்டலிஜன்ட், கருணா குரூப், பிள்ளையான் குரூப் இப்படி எல்;லோரும் சிவிலுடையில் பிஸ்டலுடன் நடமாடுவார்கள். இவர்களையெல்லாம் தாண்டி, நாங்கள் சட்டம், நீதி, நேர்மை, நியாயம், தரமம் என்பவற்றை நிலைநாட்ட வேண்டிய ஒரு கடமைப் பொறுப்பில் தான் அப்போது நாங்கள் இருந்தோம். அந்தக் கடமைப் பொறுப்பை நான் என்னால் இயலும் வரையில் செய்தேன்.
இப்போது வவுனியாவுக்கு வந்தபோது பிறந்த மண்ணிற்கு வந்த ஓர் உணர்வு ஏற்படுகின்றது. வவுனியாவில் நிகழ்வு என்றதும், உடனே அதில் கலந்து கொள்ள வருவேன் என்று என்னுடன் தொடர்புகொண்ட விழா ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்தேன். ஏனெனில் அந்த அளவுக்கு வவுனியாவுடனான எனது உறவு இறுக்கமானது. உணர்வுபூர்வமானது.
வவுனியாவில் கடமையாற்றிய காலத்தில் 1500 சடலங்களைப் பார்த்திருக்கின்றேன். அவற்றிற்கு மரண விசாரணை நடத்தியிருந்தேன். இராணுவத்தினர், விடுதலைப்புலிகள், சகோதர இயக்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என, தமிழ், சிங்கள, முஸ்லிம் என்று மூவினத்தையும் சேர்ந்த அவர்கள் அனைவரும் இலங்கை மாதாவின் புதல்வர்கள்.
 
அந்தக் காலப்பகுதியில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டு உயிர் பிரிந்தவுடனேயே, அந்த சடலங்களை நாங்கள் பார்த்தோம். சிந்திய இரத்தம், சிதறிய உடற்பாகங்களையும் கண்டோம். அப்போது அவலக்குரல்கள், ஐயோ என்று அலறும் கதறல்கள் அனைத்தையும் எங்கள் காதுகள் கேட்ட வண்ணம் இருந்தன. ஆனால் அப்போது எங்களுக்குக் கண்ணீர் வரவில்லை. நீதிபதிகள் அப்படித்தான் இறுக்கமாக இருக்க வேண்டும். அவ்வாறே நாங்கள் இருந்தோம். ஆனால் வீட்டிற்குச் சென்ற பின்னர் அந்தக் காட்சிகள் எங்களைக் கண்ணீர்; சிந்தச் செய்திருந்தன.
இந்த கல்லூரியில் 2002 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பிpல் கல்வி கற்ற மாணவர்கள் குழுவினர் செய்திருப்பதை முன்மாதிரியாகக் கொண்டு ஏனைய பழைய மாணவர்களும் சிறிய சிறிய வேலைத்திட்டங்களை மேற்கொண்டு இந்தக் கல்லூரியின் வளர்ச்சிக்கும் கல்வி மேம்பாட்டுக்கும் உதவி புரிய முன்வர வேண்டும் என்றார். மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களின் நீதிபதிகள், வவுனியா அரசாங்க அதிபர், ஆசிரியர் தமிழருவி கா.சிவகுமாரன், பழைய மாணவர் பிரதிநிதிகள் என பலரும் இங்கு உரையாற்றினார்கள்.

 

SHARE