இலங்கையின் கொலைக்களம், சாட்சிகளற்ற படுகொலைகள் போன்ற ஆவணப்படங்கள் மூலமாக இலங்கையின் போர்க்குற்றங்களை சர்வதேச மயப்படுத்துவதில் சனல்4 தொலைக்காட்சி பாரிய பங்காற்றியது.
இதன் காரணமாக சிங்கள ஊடகங்களுக்கு குறித்த தொலைக்காட்சி என்றாலே ஒரு கசப்பாக உள்ளது.
இந்நிலையில் சனல்4 தொலைக்காட்சியின் தயாரிப்பாளர் ஜோன் ஸ்னோ மயிலிட்டித் துறைமுகம் பகுதிக்குள் பிரவேசிக்க முயன்றதை சட்டவிரோதமான செயலாக சித்தரித்து சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மயிலிட்டி துறைமுகப் பகுதிக்குள் பிரவேசிக்க முயன்ற ஜோன் ஸ்னோ பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
மயிலிட்டி துறைமுகப் பகுதி யாழ்ப்பாணத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்திருக்கும் நிலையில் அவரது பிரவேசம் பாதுகாப்புத் தரப்பினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இலங்கையின் எப்பகுதிக்கும் தடையின்றி சென்று வருவதற்கான கடிதமொன்று இவரிடம் காணப்பட்டுள்ளது.
எனினும் குறித்த கடிதம் தம்மால் வழங்கப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.