மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு அருகில், நேற்று இரவு இடம்பெற்ற கத்திக்குத்து மற்றும் கோடரி வெட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் தாமரைக்கேணி கிராமத்தைச் சேர்ந்த மன்சூர் முஜாஹித் (வயது 26) என்ற இளைஞனே மேற்படி படுகாயமடைந்துள்ளார்.
இக்குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் கோடரி ஆகியன அதே இடத்திலேயே விட்டுச் செல்லப்பட்டுள்ளன.
இந்த இளைஞன் இறுவட்டு (சி.டி) விற்பனை நிலையமொன்றுக்கு இறுவட்டு வாங்க வந்தபோதே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு விரைந்த குற்ற இடத்தில் பொலிஸ் அதிகாரிகள், தடயங்களைப் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.