அதியுயர் சமஷ்டி குறித்து ஆராய சம்பந்தன், சுமந்திரன், சித்தார்த்தன் லண்டன் விஜயம்
இரு தினங்களுக்கு முன்பதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் அதியுயர் சமஷ்டி குறித்து ஆராய்வதற்காக லண்டன் நோக்கிப் பயணமானார். சாதாரணமாகவே சமஷ்டியை வழங்க மறுக்கும் இலங்கையரசு அதியுயர் சமஷ்டியை எவ்வாறு வழங்கப்போகின்றது என்கின்ற சந்தேகம் ஒருபுறமிருக்க, அதியுயர் சமஷ்டி குறித்து வெளிநாடுகளில் ஆராய்வதற்காக இம்மூவரும் வெளிநாடு நோக்கிச் சென்றிருப்பது நகைப்புக்குரிய விடயமாகவிருந்தாலும்.
தமிழ் மக்களுடைய உரிமைகள் மற்றும் இனப்படுகொலைகள் தொடர்பிலும் தீர்வுகள் எதுவும் எட்டப்படாது மீண்டும் நாடு நோக்கித் திரும்பும் நிலையிலேயே அவர்களது விஜயம் அமையும். அனைத்திற்கும் மேலாக வெளிநாடுகளுக்குச் சென்று வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மஹிந்த ராஜபக்ஷவினது ஆட்சியில் தவறுகள் இடம்பெற்றது. இனிமேல் நாம் அவ்வாறான தவறுகள் இடம்பெற இடமளிக்கப்போவதில்லை என்ற கருத்தினை அந்தந்த நாடுகளுக்குத் தெரிவித்துள்ளார். இதன் காரணத்தால் இந்நாடுகள் இலங்கையில் இனிமேல் யுத்தம் இடம்பெறாது என்பதால் அதிகமான அபிவிருத்தித் திட்டங்களை முன்வைத்திருக்கின்றது.
முக்கிய அரசியல் பிரமுகர்களையும், விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளையும் லண்டனில் சந்தித்த சம்பந்தன் இந்தச் சந்திப்புக்களினால் எதுவும் பயன் கிடைக்கவில்லை. காரணம் இனப்படுகொலை இலங்கையில் இடம்பெறவில்லை என சர்வதேச சமுகத்திற்கு இலங்கையரசு வலியுறுத்தியுள்ளது. காணாமற்போனவர்கள் காணாமற்போனவர்கள் தான் என்பதையே மீண்டும் மீண்டும் ரணில் அவர்கள் கூறிவருகின்றார். இதற்கான தீர்வினை பாராளுமன்றில் எதிர்க்கட்சியாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அங்கம் வகித்துக்கொண்டு எதனையும் செயற்படுத்த முடியாது என்பதே வெளியுலகில் இருக்கக்கூடிய அரசியல் ராஜதந்திரிகளின் கருத்தாகும். இந்நிலையில் வடமாகாண சபையில் இனப்படுகொலைதான் இடம்பெற்றது என்கின்ற பிரேரணை கொண்டுவரப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. பதவிகளை வழங்குவதன் மூலம் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை மூடிமறைக்க அரசு முற்படுகிறது. இந்நிலையில் அதியுயர் சமஷ்டி என்பதும் தமிழ் மக்களுக்கான தீர்வுகள் என்பதும் எவ்வாறு சாத்தியப்படும்?
இரா.சம்பந்தனைப் பொறுத்தவரை தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுத்தர முயற்சிக்கின்றார். அதற்கிடையில் அவரது அரசியல் வாழ்க்கை நிறைவடைந்துவிடும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. சம்பந்தனைப் போன்றதொரு ஆளுமைகொண்ட ஒருவர் இனிமேல் தமிழ்த் தரப்பில் இருந்து வருவது என்பது கேள்விக்குறியே. சம்பந்தனுக்குப் பின்னரான பதவியை சுமந்திரனிடம் வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் வடமாகாணசபைக்கும், த.தே.கூட்டமைப்புக்கும் இடையில் முறுகல் நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இவற்றை சீர்படுத்தாது அதியுயர் சமஷ்டி குறித்து பேசுவதற்காக சம்பந்தன் வெளிநாடு சென்றிருப்பது என்பது தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.