வத்தளை, ஒலியமுல்லை பகுதியில் தமிழ் பாடசாலைக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியில் புதிய தமிழ் பாடசாலைக்கான அடிக்கல் எதிர்வரும் பெப்ரவரி 13ம் திகதி நாட்டப்படும் என அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நான்கு மணித்தியாலங்களாக கொழும்பு மாகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற மேல் மாகாண தமிழ் மொழிமூல பாடசாலை கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலின் போது, அமைச்சர் மனோ கணேசனின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவித்தலை மேல்மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்ச அறிவித்தார்.
கொழும்பு மாகாவலி கேந்திர நிலையத்தில் இன்று காலை முதல் மேல் மாகாண தமிழ் மொழிமூல பாடசாலை கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.
மேல் மாகாண ஆளுநர் கே. சி. யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் மனோ கணேசன், மேல்மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்ச, முஜிபுர் ரஹ்மான் எம்பி, மேல்மாகாணசபை உறுப்பினர்கள் சண். குகவரதன், கே. டி. குருசாமி, எம். பாயிஸ் உட்பட மேல்மாகாணசபை உறுப்பினர்கள், மேல்மாகாண கல்வி அமைச்சு செயலாளர் விஜயபந்து, மாகாண கல்வி பணிப்பாளர் விமல் குணரத்ன, மேல்மாகாணத்தில் உள்வரும் கம்பஹா, கொழும்பு, களுத்துறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வளைய கல்வி பணிப்பாளர்கள், அதிகாரிகள் மற்றும் மேல்மாகாணத்தின் அனைத்து தமிழ், முஸ்லிம் பாடசாலை அதிபர்கள் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டார்கள்.
இது தொடர்பில் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் கூறியுள்ளதாவது,
மேல் மாகாண தமிழ் மொழி மூல பாடசாலைகளின் வளப்பற்றாக்குறைகள் தொடர்பான ஒரு கலந்துரையாடலை நடத்திட வேண்டும் என்ற எண்ணம் நமது நல்லாட்சி அமைந்த நாள் தொடக்கம் இருந்து வந்தது. அதை இன்று நமது ஆளுநர் கே. சி. யோகேஸ்வரன் நிறைவேற்றி தந்துள்ளார். அவருக்கு நமது மக்கள் சார்பாக நான் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
அவரது அழைப்பை ஏற்றுக்கொண்டு மேல்மாகாண கல்வி அமைச்சரும், எனது நீண்டக்கால இனிய நண்பருமான ரஞ்சித் சோமவன்ச உட்பட நாம் அனைவரும் அதிகாரிகளுடன் கலந்து கொண்ட கூட்டத்தில் பல விடயங்கள் மனந்திறந்து பேசப்பட்டு பல தீர்மானங்களை எடுத்துள்ளோம்.
இதில் கம்பஹா மாவட்ட தமிழ் மக்களின் மிக நீண்டகால கோரிக்கையான, வத்தளை ஓலியமுல்லை பகுதியில் தமிழ் பாடசாலைக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியில் வத்தளையில் புதிய தமிழ் பாடசாலைக்கான அடிக்கல்லை எதிர்வரும் பெப்ரவரி 13ம் திகதி நாட்டி, பாடசாலை நிர்மாணப்பணிகளை ஆரம்பிப்பது என்பது முக்கியமானது ஆகும்.
இந்த பணிக்கு முதற்கட்டமாக மூன்று மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டு உடனடியாக மேல்மாகாண கல்வி அமைச்சு செயலாளர் விஜயபந்துவினால் அறிவிக்கப்பட்டது.
அத்துடன் களுத்துறை மாவட்ட தமிழ் மக்களின் மிக நீண்டகால கோரிக்கையின் படி மத்துகமையில் தமிழ் பாடசாலை அமைக்க வேண்டும் என்பதையும் நான் இந்த கூட்டத்தில் எடுத்து கூறினேன்.
இதையடுத்து மத்துகமையில் தமிழ் பாடசாலை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பில் ஏற்கனவே களுத்துறை மாவட்ட அபிவிருத்தி குழுவில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதையும் கணக்கில் எடுத்து, மேல்நடவடிக்கை எடுப்பதாக, மேல்மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்ச அறிவித்தார்