தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தீர்மானித்துள்ளனர்.
எனினும் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்கக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.
தேசிய சுதந்திர தின நிகழ்வுகளை புறக்கணிக்க வேண்டுமென இந்த தரப்பினர் கோரி வருகின்றனர்.
வடக்கு பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வுத் திட்டம் வழங்காமை, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்யாமை, வடக்கில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்காமை, இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளை துரித கதியில் விடுவிக்காமை போன்ற காரணிகளின் அடிப்படையில் இம்முறை தேசிய சுதந்திர தின நிகழ்வுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரிக்க வேண்டுமென கோரியுள்ளனர்.
எவ்வாறெனினும், தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.