எம்பிலிப்பிட்டி இளைஞர் மரணத்துடன் தொடர்புடைய பொலிஸாரை கைது செய்யுமாறு கோரிக்கை!

293

எம்பிலிப்பிட்டி இளைஞர் மரணத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்யுமாறு இளைஞரின் மனைவி கோரியுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

உயிரிழந்த சுமித் பிரசன்னவின் மனைவி நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

கணவரின் மரணத்திற்கு காரணமாயிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை உடனடியாக அமுல்படுத்துமாறு பொலிஸ் மாஅதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரியுள்ளார்.

விருந்துபசாரமொன்று நடைபெற்று கொண்டிருந்த வேளை அந்த வீட்டுக்குள் புகுந்த எம்பிலிப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, துணைப் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் கணவரைத் தாக்கி வீட்டின் மேல் மாடியிலிருந்து கீழே தள்ளி விட்டதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கர்ப்பிணியான தாம், துணைப் பொலிஸ் அத்தியட்சகர் கணவரை மேல் மாடியிலிருந்து தள்ளி விடுவதனை நேரில் கண்டதாகத் தெரிவித்துள்ளார்.

sumith

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் துணைப் பொலிஸ் அத்தியட்சகரை கைது செய்யுமாறு எம்பிலிப்பிட்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும் இதுவரையில் இந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் கைது செய்யப்படவில்லை.

பொலிஸ் மா அதிபர் இந்த இரண்டு அதிகாரிகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருவதாக, சுமித் பிரசன்னவின் மனைவி குற்றம் சுமத்தியுள்ளார்.

அதிகாரிகளை கைது செய்ய பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடுமாறும், உத்தரவினை இதுவரையில் அமுல்படுத்தாமைக்கு ஐந்து லட்சம் நட்டஈடு வழங்க வேண்டுமெனவும் கோரி மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE