2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியமை உட்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் விடுதலைப் புலிகளின் நிதி முகாமையாளர் எமில்காந்தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜேவிபி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகியன கோரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பில் கருத்துரைத்துள்ள ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் நிசாந்தஸ்ரீ வர்ணசிங்க,
ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொட விடயத்தில் பல புலனாய்வு அதிகாரிகள் கைதுசெய்யப்பட்;டுள்ளனர். எனினும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிடியாணைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
சுனாமியின் பின்னர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சியின் போது அமைக்கப்பட்ட ராடா என்ற அபிவிருத்திக்கான அமைப்பில் விடுதலைப் புலிகளின் பிரதிநிதியாக எமில்காந்தன் செயற்பட்டார்.
இந்தநிலையில் அவர் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நிசாந்தஸ்ரீ கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜேவிபியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத், தமது கோரிக்கையில், விடுதலைப் புலிகளின் நிதியாள்கையில் ஈடுபட்டவர் என்ற அடிப்படையில் எமில்காந்தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுள்ளார்.
வெளிநாட்டில் வசிக்கும் எமில்காந்தன் என்ற அன்டன் சமீல் லக்ஷ்மிகாந்தன் என்பவருக்கு எதிரான சிவப்பு ஆணை மற்றும் பிடியாணை என்பவற்றை கடந்த திங்கட்கிழமையன்று கொழும்பு விசேட நீதிமன்ற ஆணையாளர் ஐராங்கனி பெரேரா நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் எமில்காந்தன் இலங்கைக்கு திரும்பி பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடையவுள்ளார் என்று அவரின் சட்டத்தரணி, சுரங்க வெத்தசிங்க தெரிவித்துள்ளார்.