சுஷ்மாவுடனான சந்திப்பு சந்தேகமே!- சூசகமாகத் தெரிவித்தார் விக்கி

271

இலங்கைக்கு நாளை வியாழக்கிழமை வருகை தரும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜைச் சந்தித்தால், இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் பிரஸ்தாபிப்பேன். இல்லாவிடின் இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரைச் சந்திக்கும் போது இந்த விடயம் தொடர்பில் கதைப்பார்கள் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணக் கடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளது. இதனைத் தடுப்பதற்கு ஒழுங்கு முறையான நடவடிக்கை தேவை தானே?’ என்று வடக்கு முதல்வரிடம் வினவிய போது,

இந்திய வெளிவிவகார அமைச்சர் நாளை வியாழக்கிழமை இலங்கைக்கு வருகின்றார். அவரைச் சந்தித்தால், இந்த விடயங்கள் தொடர்பில் பேசுவேன். நான் சந்திக்காவிடினும், இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரைச் சந்திப்பார்கள். அவர்கள் இந்த விடயம் தொடர்பில் பேசுவார்கள் என்று பதிலளித்தார்.

இதேவேளை, நாளை வியாழக்கிழமை கொழும்புக்கு வருகை தரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா, யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.

இருப்பினும் யாழ்ப்பாணத்துக்கான அவரது பயணம் இடம்பெறாது என்று இந்தியத் துணைத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

SHARE