மலையக கல்வி முன்னேற்றத்திற்கு வித்திட்டவர் அமரர்.சௌமிய மூர்த்தி தொண்டமான் – மத்திய மாகாண விவசாயத்துறை மற்றும் இந்து கலாசார அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரன் தெரிவிப்பு
மலையகத்தின் தந்தை என போற்றப்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மறைந்த சௌமிய மூர்த்தி தொண்டமான் உருவாக்கிய இரண்டு தோட்டத்திற்கு நடுவில் ஒரு பாடசாலை என்ற திட்டமே இன்று மலையக கல்வி வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கின்றது. எதிர்காலத்தில் பெருந்தோட்ட பகுதிகளில் தேயிலை தொழில் நிலைத்திருக்காது ஆகையால் அரசாங்க தொழிலுக்கு தொழிலாளர்களின் பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற அவரின் சிந்தனையால் மலையக தமிழ் பாடசாலைகளில் இன்று 44 ஆயிரத்துக்கு மேலான ஆசிரியர்கள் மற்றும் அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் பணிப்புரிவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது மேலும் உயர வேண்டும்.
அத்தோடு தொடர்ந்து வரும் அரச தொழில்களுக்கும் நமது பிள்ளைகளின் கல்வியில் அக்கறை கொண்டு இவர்களை தயார்ப்படுத்த வேண்டும் என மத்திய மாகாண விவசாயத்துறை மற்றும் இந்து கலாசார அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரன் தெரிவித்தார்.
தனது பன்முகப்படுத்தப்பட்ட 10 இலட்சம் ரூபா நிதியில் வட்டகொடை வடக்கு மடக்கும்புரை சின்னகணக்கு தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலை கட்டிடம் ஒன்றை திறந்து வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.
அன்று அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமான் மலையகத்தின் கல்வி வளர்ச்சியை உருவாக்கவென 402 ஆசிரியர்களை நியமனம் செய்தார். ஆனால் அவர்கள் வடக்கு, கிழக்கு பகுதியை சார்ந்தவர்கள் அவர்கள் ஊடாக கல்வி கற்று இன்று 44 ஆயிரத்துக்கு மேலான ஆசிரியர்கள் மற்றும் அரச ஊழியர்கள் சேவையாற்றுகின்றார்கள் என்றால் அதற்கு வித்திட்டவர் அமரர். சௌமிய மூரத்தி தொண்டமான் தான்.
அமரர். சௌமிய மூரத்தி தொண்டமான் சேவை காலத்தில் வீடு கட்டவோ, ஆலயம் அமைக்கவோ, அல்லது வீதிகளை அமைக்கவோ ஆசைப்பட்டதில்லை. இரண்டு தோட்டத்திற்கு நடுவில் ஒரு பாடசாலை அமைய வேண்டும் என்பதே அவரின் இலக்காக இருந்தது.
அரசியல் ரீதியாக அணைவரும் ஒன்றுப்பட்டு மலையக கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும். இதனூடாகவே மலையகம் மாற்றமடையும்.
குற்றவாளிகள் உருவாகுவதில்லை. சூழ்நிலைகளே குற்றவாளிகளை உருவாக்குகின்றது.
மலையகத்தை பொருத்த வரை சிறு பராயத்தில் பிள்ளைகளே சிறுவர் பள்ளியில் சேர்த்து நல்லொழுக்கத்துடன் கல்வியை கற்க பெற்றோர்கள் முன்வருவார்கள் என்றால் அவர்கள் நாட்டுக்கு நல்ல பிரஜையாகவும் தலைவராகவும் மாற முடியும். வீட்டுக்கு வருமானம் தேவை என்பதற்காக இடைநடுவில் கல்வியை விட்டு பிள்ளைகளை கொழும்பு மற்றும் வெளிமாவட்டங்களுக்கு வேலைக்கு அமர்த்துவதை பெற்றோர்கள் முற்றாக தடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.