கெஹலிய ஆஜராகியும் மொழிபெயர்ப்பாளர் இல்லாததால் ஒத்திவைப்பு

271
யாழ்.குடாநாட்டில் அரசியல் மற்றும் மனித உரிமை பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் காணாமல்போன முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர்களான லலித், குகன் ஆகியோரின் வழக்கு மீதான விசாரணை இன்றைய தினம் யாழ்.நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் மேற்படி இரு செயற்பாட்டாளர்களும் யாழ்ப்பாணத்தில் வைத்துக் காணாமல் போயிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு உறவினர்களால் யாழ்.நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட நிலையில் லலித், குகன் ஆகியோர் தமது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர் என ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் வழங்கிய முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் பணித்திருந்த போதும் அவர் மன்றிற்கு வந்திருக்கவில்லை.

இந்நிலையில் அவர் மீது இன்றைய வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்படலாம் என நம்பப்பட்ட நிலையில் ஹெகலிய ரம்புக்வெல இன்று நீதிமன்றில் ஆஜரானார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ரம்புக்வெல சாட்சியம் வழங்குவதற்கு நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளர் இல்லாமை காரணமாகவும், தொழிநுட்ப கோளாறு காரணமாகவும் மேற்படி வழக்கு எதிர்வரும் 5ம் மாதம் 13ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

SHARE