உயர் பாதுகாப்பு வலயத்தில் 2 இராணுவ முகாம்கள் விடுவிக்கப்படவில்லை

615
உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து ஏற்கனவே விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுடைய குடிமனைகளை மையப்படுத்தி சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள 2 இராணுவ படைமுகாம்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

இதனால் அப்பகுதியினைச் சேர்ந்த 400 குடும்பங்கள் இன்று வரைக்கும் மீள்குடியேற முடியாமல் நலன்புரி முகாம்களில் உள்ளனர் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நேற்று பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் மீள்குடியேற்றம் தொடர்பான விளக்கமளிப்பினை வழங்கிய பிரதேச செயலர் சிறிமோகனினாலேயே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த வருடம் முதலாம் கட்ட மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போது ஒட்டகப்புலம் மற்றும் வறுத்தளைவிளான் போன்ற பகுதிகள் விடுவிக்கப்பட்டிருந்தன. இருப்பினும் குறித்த இரு பிரதேசங்கள் பகுதியளவிலேயே விடுவிக்கப்பட்டன.

அதாவது இரு பிரதேசங்களிலும் உள்ள மக்களுடைய குடியிருப்புக்கள், பாடசாலைகள் என்பவை விடுவிக்கப்படவில்லை. இப்பகுதிகளை உள்ளடக்கி இராணுவத்தினர் பாரிய படைமுகாங்களை அமைத்திருந்தாலேயே இப்பகுதிகள் விடுவிக்கப்படவில்லை.

குறிப்பாக, ஒட்டகப்புலப் பகுதியில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பினைக் கொண்ட இராணுவ முகாம் இன்றுவரை விடுவிக்கப்படாமல் உள்ளது, அதே போன்று வறுத்தளைவிளானில் 35 ஏக்கரை கொண்ட இராணுவ முகாம் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

நடேஸ்வராக் கல்லூரியும் அதனை அண்மித்த பகுதிகள் சிலவும் மிக விரைவில் விடுவிக்கப்படும்

வலி.வடக்கு இராணுவ அதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள நடேஸ்வராக் கல்லூரியும் அதனை அண்மித்த பகுதிகள் சிலவும் மிக விரைவில் விடுவிக்கப்படும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உறுதியளித்துள்ளார்.

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நேற்றுக் காலை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இணைத்தலைமை தாங்கி கூட்டத்தினை நடத்தியிருந்தார்.

இதன் போது வலி.வடக்கின் மீள்குடியேற்றத்தின் அவசியம் தொடர்பாக பலர் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். குறிப்பாக நல்லாட்சி அரசாங்கத்துடன் பேசி எமது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே அரசாங்கத்திற்கு எதிராக போராடுவதற்கு நாங்கள் இன்னும் முன்வரவில்லை.

எங்களுடைய நிலம் எங்களுக்கு வேண்டும். மீள்குடியேறாமல் இன்னும் எத்தனை காலங்கள் அவலங்களை சந்திக்கப் போகின்றோம் என்றனர்.

இதற்குப் பதிலளிக்கும் முகமாக கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்:- வலி.வடக்கின் ஏனைய சில பகுதிகள் விரைவில் விடுவிக்கப்படும். நிச்சயமான மக்கள் தமது காணிகளில் மீள்குடியேற்றப்படுவார்கள்.

குறிப்பாக காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி மிக விரைவில் முழமையாக விடுவிக்கப்படும். அப் பாடசாலையினை அண்மித்த பகுதிகள் சிலவும் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என்று அவர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் தெரிவித்திருந்தார்.

SHARE