உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 வீதமாக அதிகரிக்கும் திருத்தச் சட்டமூலத்தை தாக்கல் செய்வது வரலாற்று தருணம் என உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று திருத்தச் சட்டமூலத்தை தாக்கல் செய்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
உலகில் முதல் பெண் பிரதமர், பெண் ஜனாதிபதி ஆட்சி செய்த நாட்டில் பெண்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.
உலகில் கல்வித்துறை உட்பட பல துறைகளில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படுகிறது. இலங்கையில் உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு கௌரவ ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த திருத்தச் சட்டமூலம் சமர்பிக்கப்படும் போது எதிரணியில் இருக்கும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்துவது துரதிஷ்டவசமானது.
எனினும் எதிரணியில் இருப்பவர்களும் ஆதரவு வழங்குவார்கள் என நம்புகிறேன் என அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
அதேவேளை இங்கு உரையாற்றிய ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
உள்ளுராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகளுக்கு தெரிவு செய்யப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் யோசனை கொண்டு வரப்படும் போது எதிரணியில் இருப்பவர்கள் குழப்பது வேடிக்கையானது என்றார்.
எதிரணியின் கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் நேற்று இந்த திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 ஆக அதிகரிப்பது மிகவும் முக்கியமானது என அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையை சேர்ந்த பெண்கள் வெளிநாடுகளில் தொழில் புரிந்து நாட்டுக்கும் பொருளாதார ரீதியாக உதவி வருவதுடன் தோட்டங்களில் தொழில் புரியும் பெண்களும் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு வழங்கி வருகின்றனர்.
உள்ளூராட்சி சபைகளில் போன்று நாடாளுமன்றத்திலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதுடன் அதனடிப்படையில் மாவட்டங்களில் பெண்கள் வேட்பாளர்களாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சந்திராணி பண்டார குறிப்பிட்டுள்ளார்.
– See more at: http://www.tamilwin.com/show-RUmuyCSUSWgv5H.html#sthash.pupRzILI.dpuf