முல்லைத்தீவு மாவட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திடைந்த முப்பது மாணவர்களை புலம்பெயர் உறவுகள் ஊக்குவித்துள்ளனர். சாதிக்கும் சந்ததி செயற்றிட்டத்தின் பதினாறாம் கட்டத்துடன் கைகோர்த்து மேற்படி முன்னெடுப்பினை வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் ஊடாக அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பாக மேலும் அறியவருகையில், மாணவர்களின் கல்வி ஊக்குவிப்பை நோக்காகக்கொண்டு கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து சாதிக்கும் சந்ததி செயற்றிட்டமானது முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்களால் முன்னெடுக்கப்படும் இச்செயற்றிட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் புலம்பெயர் தமிழுறவுகள் கைகோர்த்து தம் பங்களிப்பினை வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில் இச்செயற்றிட்டத்தின் பதினாறாம் கட்டமானது அவுத்திரேலியா, கனடா மற்றும் சுவிற்சலாந்து ஆகிய நாடுகளில் வாழும் புலம்பெயர் உறவுகளின் கைகோர்ப்பில் மாவட்டம் முழுவதுமாக புலமைப்பரிசில் தேர்வில் சித்தியடைந்த முப்பது மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்கட்கு தலா மூவாயிரம் ரூபாய்(3000.00) ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
மு/குமாரசாமி வித்தியாலயம், மு/வள்ளிபுனம் க.உ வித்தியாலயம், மு/இரணைப்பாலை றோ.ம.க. வித்தியாலயம், மு/குமுளமுனை மகா வித்தியாலயம்,மு/ஒட்டுசுட்டான் இ.த.க.பாடசாலை,மு/முத்துவிநா யகர் தமிழ் வித்தியாலயம்,மு/கற்சிலைமடு அ.த.க பாடசாலை மற்றும் மு/செம்மலை மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலுள்ள 30 மாணவர்கட்கு குறித்த உதவித்தொகை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.